பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்ட அரசியல்வாதிகளிடமிருந்தோ இயக்கவாதிகளிடமிருந்தோ நற்சான்றிதழ் பெறுவதல்ல அவர் வேலை. வாசக மனத்தில் நுட்பமான, வலிமையான, ஆழமான அதிர்வுகளை எழுப்பி அவர்களது அனுபவங்களை எல்லையற்று விரித்துக்கொண்டு போவதே அவரது நோக்கம்.

புதுமைப்பித்தனின் படைப்புகளில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்கள் தரப்பில் சேர வேண்டிய நியாயங்களை அவர் தயக்கமின்றி அளித்துக்கொண்டு போகிறார். கதாபாத்திரங்களைக் கறுப்பு வெள்ளையாகப் பிரிக்க அவரது படைப்புப் பார்வையில் இடம் இல்லை. அவர் வாழ்ந்திருந்த காலத்துப் புதிய உளவியல் அறிவுகளும் மனிதனை மறுபரிசீலனை செய்துகொண்டிருந்த நவீன அறிவுகளும் எந்த மனித ஜீவனையும் நன்மையின் உருவமாகவோ தீமையின் உருவமாகவோ பார்க்க இடம் தரக்கூடியவை அல்ல. இலக்கிய, புராண, சமயச் சிந்தனைகளின் நீட்சியாக இருந்து புதுமைப்பித்தனின் காலத்துக்கு முற்பட்ட நாவல்கள் வரையிலும் வந்த கதாநாயகன்- வில்லன் கருத்தாக்கம் அதன் சிந்தனை சார்ந்த சகல சங்கேதங்களுடனும் புதுமைப்பித்தன் படைப்புகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த இலக்கிய, புராண, சமயச் சிந்தனை சார்ந்த கறுப்பு-வெள்ளை கருத்தாக்கம்தான் இன்றுவரையிலும் நம் அரசியல் சூதாட்டங்களையும் திரையுலகச் சூதாட்டங்களையும் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

புதுமைப்பித்தன் எழுதியுள்ள சிறுகதைகளின் எண்ணிக்கையை வைத்தும் மிகச் சிறப்பான கதைகள் பலவற்றையும் அவர் உருவாக்கியிருப்பதை வைத்தும் சிறுகதை விற்பன்னர் என்றே நாம் அவரை அழைக்க விரும்புகிறோம். ஆனால் அவரது மொத்தக் கதைகளையும் படித்துப் பார்க்கிறவர்களுக்குச் சிறுகதையைவிட நாவலுக்குரிய குணங்கள்தான் அவரிடம் முனைப்பாகச் செயல்படுகின்றனவோ என்ற எண்ணம் ஏற்படக்கூடும். தன் இயற்கைக்குரிய சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்போது சிறுகதைகளை மீறிய சித்திரங்களையும், உருவம் கூடிநிற்கும் சிறுகதைகளைப் படைக்கும்போது தன்னை முடக்கிக்கொள்ளும் அசௌகரியத்தையும்தான் அவர் பெற்றிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கதைச் சரடிலிருந்து விலகிச் செல்லும் பக்கவாட்டுச் சஞ்சாரம் என்பது பல கதைகளிலும் கட்டுப்படுத்த முடியாத மீறல்களாக வெளிப்பட்டிருக்கிறது. தன் மன ஓட்டத்தில் குமிழியிடும் விமர்சனங்களைக் கதையின் குறிக்கோள் கேட்காத இடங்களிலும் அவர் பதிவு செய்யவே விரும்புகிறார். 'சங்குத் தேவனின் தர்மம்' சிறுகதையில் கதையைத் தொடங்கியதுமே ஹிந்து தர்மத்தின் கட்டுப்பாடுகளைப் பற்றிய விளாசல் சற்று விரிலாகவே இருக்கிறது. இத்தனைக்கும் அது சிறுகதை உருவத்தை மதிக்கும் நோக்கம் கொண்டு எழுதப்பட்ட ஒரு கதை. கதையின் சரடிலிருந்து விலகிச் சென்றாலும் உறுத்தலின்றி மீண்டும் சரடைப் பிடித்துவிடலாம் என்பதில் அவரது நம்பிக்கை அலாதியானது. பொருந்திவராத இடங்களிலும் இந்தப் பக்கவாட்டுச் சஞ்சாரம் தன்னளவில் சுவையாக இருப்பதால் வாசகன் பெறும் மகிழ்வு, விலகல் சார்ந்த உறுத்தலைப் பெரும்பாலும் காணா-

48