பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மல் போய்விடச் செய்கிறது. இடம், மனிதர்கள் சார்ந்த பொது வருணனைகள், கதைத் தேவைக்கு மேலாகத் தன்னளவில் அவருக்குப் பெரும் உற்சாகத்தைத் தருபவை. மூன்றரை பக்கங்கள் கொண்ட 'பொன்னகரம்' கதையில் முக்கால் பங்கு வருணனை; கால் பங்கு கதை. ஒற்றை நோக்கை மையமாக வைத்துச் சிறுகதைகள் அமையவேண்டும் என்பது அந்த உருவம் சார்ந்த ஒரு பொது விதி. பல கதைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்குகளுக்கு இடம் தந்து கதையை அமைக்கிறார் புதுமைப்பித்தன். வெளி சார்ந்த சஞ்சாரம் அடிப்படைத் தேவையாக இருக்கும் படைப்பாற்றல் புதுமைப்பித்தனுடையது. சிறுகதை எனும் ஒற்றையடிப்பாதை அவருக்குப் பல சமயங்களில் போதுமானதாக இல்லை. பத்திரிகைகளின் முதல் தேவையாகச் சிறுகதைகள் இருந்த காலம். படைப்புக் கனவை மேற்கத்தியச் சிறுகதைகளின் சிகரங்கள் தூண்டிக்கொண்டிருந்த காலம். இந்தக் காலத்தின் தேவையைப் புதுமைப்பித்தன் பூர்த்தி செய்திருக்கிறார். அவர் பூர்த்தி செய்த விதம் நீச்சல் குளத்திற்குள் ஒரு திமிங்கலம் வாலை அசைத்துக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.


தமிழ் வாழ்வைப் புரிந்துகொள்வதற்குப் புதுமைப்பித்தன் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது. அவருடைய மொழி, மரபின் ஜீவனையும் மண்ணின் சாரத்தையும் இணைத்தது. படைப்புக்கு வலு சேர்க்க உதவிய அவரது ஆற்றல்கள் பல்வேறு தளங்களைச் சார்ந்தவை. இலக்கியம், புராணம், சமயம், ஜாதி,சமூகம், குடும்பம் போன்ற எந்தத் தளத்தில் செயல்படும்போதும் அந்தத் தளத்திற்குரிய வாசனைகளை ஏற்றி மிகுந்த நம்பகத்தன்மையை அவரால் வாசகனின் மனத்தில் உருவாக்கிவிட முடிகிறது. அவரது படைப்புகள் தமிழ்க் கலையின் சாதனை என்று பெருமைப்படும் வகையில் இருக்கின்றன.

இருப்பினும் மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது அவரது ஆற்றல்கள் அவர் போய்ச் சேர்ந்திருக்க வேண்டிய உயரத்திற்குப் போய்ச் சேரவில்லையோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது. தன் படைப்பாற்றலில் அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர் கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். வேகமாகச் செயல்பட்டாலும் தன் எழுத்தாற்றல் கலையைத் திரட்டிவிடும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம். மொழிமீது அவருக்கு இருந்த அபூர்வமான பிடிப்பு மொழியாற்றலையும் தாண்டிச் சிறுகதைகளின் நிறைவுக்குத் தேவையான சில கவனங்களைக் கொள்ள அவரைத் தூண்டாமல் போய்விட்டது. நிறைவு கூடாத பல கதைகளின் விதைகளைப் பார்க்கும்போது அவற்றிற்குரிய கவனங்கள் அளிக்கப்பட்டிருந்தால் அவை மிகச் சிறந்த கதைகளாக மலர்ச்சி கொண்டிருந்திருக்கலாம். அவற்றைப் பேணி வளர்க்கும் சிரமத்தை அவர் மேற்கொண்டிருந்தால் தமிழ்ச் சிறுகதையின் முகமும் சரி அவரது ஆளுமையும் சரி மற்றொரு தளத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.

எந்தப் படைப்பாளியும் பலமும் பலவீனங்களும் கொண்டவன்தான்.

49