பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சனை


1


ன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள்.

புதுமைப்பித்தன் கதைகள்

499