பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.

செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.

என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, "என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.

பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.

"தலையை வலிக்கிறது" என்றாள் சிணுங்கிக் கொண்டே.

"மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது" என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.

"மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்" என்றார்.

"உம்" என்று கொண்டு கண்களை மூடியவள், "நாக்கை வறட்டுது; தண்ணி" என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.

"ஏந்திரியாதே; விளப்போறே" என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது" என்றாள்.

"பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது" என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.

கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், "உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?" என்றாள்.

"நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே" என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.

பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, "முருகா" என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்க-

516

செல்லம்மாள்