சாப விமோசனம்
1
சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்து வைத்தானோ என்று தோன்றும் அளவுக்கு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.
அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்து வைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போன்ற இயற்கையின் மடியிலே கிடக்கிறாள். சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக - கல்லாக - கிடக்கிறாள்.
சற்று தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை, அவனையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.
இன்னும் சற்று தூரத்திலே இந்தத் தம்பதிகளின் குடும்பக் கூடு கம்பமற்று வீழ்ந்ததுபோல, இவர்களுக்கு நிழல் கொடுத்த கூரையும் தம்பம் இற்று வீழ்ந்து பொடியாகிக் காற்றோடு கலந்துவிட்டது. சுவரும் கரைந்தது. மிஞ்சியது திரடுதான். இவர்கள் மனசில் ஏறிய துன்பத்தின் வடுப் போலத் தென்பட்டது அது.
தூரத்திலே கங்கையின் சலசலப்பு. அன்னை கங்கை, இவர்களது எல்லையற்ற சோகத்தை அறிவாளோ என்னவோ!
புதுமைப்பித்தன் கதைகள்
527