பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நசுங்கியே போயிருப்பேன். மன்னன் அசங்க, மகாராணி கைகளைக் கட்டிலிலே ஊன்றினாள். அவளுடைய மோதிரத்துக்கிடையில் ஏறி ஒளிந்துகொண்டேன். பிறகு மன்னனும் ராணியும் கட்டிலைத் தேடுதேடென்று தேடினார்கள். அவர்கள் இருந்த நிலையை என்னால் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டே காயத்திரி ஜபித்துக் கொண்டு இருந்தேன். பிறகு கட்டிலில் உட்கார்ந்துகொண்டு சல்லாபமாகப் பேசுகையில், "மூட்டையாக இருக்கும்" என்றாள் பட்டத்து ராணி. அதற்குக் கீர்த்திவாய்ந்த அந்த மகிபதியானவன், "பெண் புத்தி என்பது பின்புத்தி என்ற ஆன்றோர் வாக்கு உன் விஷயத்தில் முற்றும் பொருந்தும். செகதலம் தாங்கும் மகிபதி கட்டிலில், பட்ட மகிஷிக்குத்தான் இடமுண்டேயல்லாமல் மூட்டைப் பூச்சிக்கு இடம் உண்டா? விவரம் தெரியாமல் பேசுகிறாயே! அதிருக்கட்டும். இந்த மாதம் மாதவிடாய் நின்றுவிட்டதா?" என்று கேட்டான். அதற்கு அவள், "அரசர்க்கு அரசே, தாங்கள் சொல்லுவது என் விஷயத்தில் முற்றும் பொருந்தும். நான் பெண்தானே? இருந்தாலும், மாதவிடாய் குறித்துத் தாங்கள் கேட்டது அவசரப்பட்ட கேள்வி. கட்டில் வந்து இருபத்தைந்து நாளும் பதினெட்டு நாழிகையுந்தான் கழிந்திருக்கின்றன; அதற்குள் எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்?" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் மீண்டும் கைகளை ஊன்றினாள். நான் இதுதான் சமயம் என்று தப்பி ஓடி வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டு, நெற்றியில் வடிந்த வியர்வையை ஆள்காட்டி விரல் கொண்டு வடித்து, 'சொட்டி' தரையில் முத்துப் போல் விழுவதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "என் அருமைக் கதிர்ப்பச்சையே, என் ஆட்சியின் அணிகலனே, நெஞ்சு 'படக்குப்படக்கு' என்று அடித்துக் கொள்ளுகிறது. உன் மடியில் தலையைச் சற்றுச் சரிக்கிறேன்" என்று படுத்துக் கொண்டார். நான் வெளியே உலாவச் சென்றிருந்தபோது திருடி எடுத்துக் கொண்டு வந்திருந்த பனிநீர் தெளித்து வீசினேன். கண்ணயர்ந்தாற்போல் படுத்திருந்தார். எனக்கோ, அவர் ரத்த பானம் பண்ணினாரா, தங்கபஸ்பம் கலந்த ரத்தம் எப்படி இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல். மெதுவாக அவரை உசுப்பிக் கேட்க, என் மூட்டைக்கு அதிபதி சொல்லுவார் :

"கேட்டாயோ பத்தினியே, ரத்தம் உண்டது நினைவிருக்கிறது, ஆனால் ருசி நினைவில்லை; பயத்தில் மறந்தே போச்சு. நாளை காலையில் நமக்கு ஒரு மந்திரியை நியமித்த பிற்பாடுதான் அந்தக் காரியத்தைக் கவனிக்க வேண்டும்; அது நம்முடைய ராச்சியத்துக்குட்பட்ட எல்லையானாலும் அன்னிய அனுபோகமாச்சே, ஆருயிருக்கு அச்சமாச்சே! மந்திரி சொல்லாமல் தந்திரம் பண்ண முடியுமா?" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டார். எனக்கோ ருசி எப்படி என்று தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடித்தது. புருஷதிலகத்தின் சிரசை மெதுவாகத் தூக்கி ஆடாமல் அசங்காமல் வைத்துவிட்டு எங்கள் அரண்மனையைவிட்டு வெளியே வந்தேன். மெதுவாகப் படுத்துக் கிடந்த தோள்பட்டையண்டை நெருங்கினேன். இருந்தாலும் சங்கோசமாக இருந்தது. பர புருஷனல்லவா? தொடாமல் எப்படி

546

கட்டிலை விட்டிறங்காக் கதை