சித்தி
செண்பகராமன் பிள்ளைக்கு வைராக்கியம் திடீரென்று ஏற்பட்டது. உலக வியவகாரங்களில் நொடித்துப் போய், மனசு கைத்து அவர் காஷாயத்தை மேற்கொள்ளவில்லை. தொட்டதெல்லாம் பொன்னான கைதான் அது. ஊரிலே செல்வாக்கு, உள்ளத்திலே நிறைவு ஏற்பட வேண்டியதற்குப் போதுமான சௌகரியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது. அவர் சிரித்துக்கொண்டேதான் காவி அணிந்து, கால் விட்ட திசையில் நடந்தார். துணை காரணமாகத் துன்பமோ, தீட்சையோ அவரை உந்தித் தள்ளவில்லை. பிள்ளையவர்கள் புறப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை. மூன்று நாட்கள் வீட்டில் யாரும் அவர் வரவில்லையே என்று கவலைப்படவில்லை. காரணம் அடிக்கடி அவர் அவ்வாறு 'சோலியாக' அசலூருக்குப் புறப்பட்டு விடுவது வீடறிந்த பழக்கம். மூன்றாம் நாள் வந்த கார்டுதான் 'அவர் இப்பொழுது செண்பகராமன் பிள்ளை அல்ல; முப்பது கோட்டை விதைப்பாடும், மூன்று லக்ஷம் பாங்கி டிபாசிட்டும் உள்ள பண்ணையார் அல்ல; மண்டபத்துக்கு மண்டபம் கொடுங்கை வைத்துப் படுத்துத் தூங்கிக் கால்கொண்ட திசையில் செல்லும் ஆண்டி' என்பதை அறிவித்தது.
பிள்ளையவர்கள் செயல் கேட்டு ஊரே கலகலத்து விட்டது. திடீரென்று வைராக்கியம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பது தெரியாத பலருக்கு, மனங்கண்டது எல்லாம் காரணமாகத் தெரிந்தது. யார் யாரெல்லாமோ என்ன என்ன எல்லாமோ சொன்னார்கள். அவ்வளவு காரணமும் தப்பு என்பது தெரிந்த ஒருவர் உண்டு. அவரே மீனாட்சியம்மாள் என்ற ஸ்ரீமதி செண்பகராமன் பிள்ளை. சம்சார பந்தத்தில் மனிதன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பூர்ணமாகத் தெரிந்து கொள்வதற்கு ஒருவருக்குத்தான் முடியும். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஊரறிய ஒரே தலையணையில் தலை சாய்க்கச் சம்மதித்துக் கொண்ட ஜீவனுக்குத் தான், அன்று தொடங்கிய ஒழுங்கு எந்தக் கதியில், எந்த நியதியில் செல்லுகிறது என்பதைப்
578
சித்தி