பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உங்கள் இருவருக்கும் உதவிசெய்வது என்றால் பிறரைத் துன்பப் படுத்துவது என்ற நினைப்பா? சற்று முன்புதான், உமது நண்பன், உம்முடன் வந்தவன், எனது அருமையான மரங்களை வெட்டி உடம்பெல்லாம் கொதிக்கும்படி செய்துவிட்டான். கண்ணை மூடிக் கொண்டு சிவனே என்றிருந்த என்னை, நீர் வெகு புத்திசாலித்தனமாக கட்டிவிட்ட உமது மொட்டை மேடையில் போட்டுப் பொசுக்கி விட்டீரே, போதும் உமது உதவி. நீர் சும்மா இருந்தால் போதும்" என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாரின் மனநிலையைக் கண்ட கிழவர், பெரிதும் ஏமாற்றமடைந்து, தானே அந்த மேடையில் உட்கார்ந்து தனது உயிரை விட்டார்.

வெட்டிவிட்டதனால் கிளைகள் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக வளர்ந்தன. தாழ்ந்தும் கவிந்தும் வளர்ந்த அரச மரத்தின் இரண்டு கிளைகளுக்கிடையில் பிள்ளையாரின் தலையகப்பட்டுக் கொண்டது. வேப்ப மரத்தின் வேர் ஒன்று பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றி வளர்ந்தது. பிள்ளையாரின் கால்களில் அரச மரத்தின் இரண்டு வேர்கள் இறுக்கி பின்னிக் கொண்டன.

பிள்ளையார் இரண்டு மரங்களுக்குள் சிறைப்பட்டார்.

காற்றடிக்கும் பொழுதெல்லாம் பிள்ளையாருக்குத் தலை போய்விடும் போல் இருந்தது. வயிற்றைச் சுற்றிய வேரோ - அதன் வேதனை சகிக்க முடியவில்லை. கால்களும் சிறைபட்டதினால் ஓடவோ முடியாது.

பிள்ளையாருக்கு நரகம் எப்படியிருக்கும் என்று சற்றுத் தெரிந்தது.

பல காலம் சென்றது... வடமேற்கு கணவாய்களில் பெய்த அமோகமான மழையினால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத் தோட்டம் போட்டு வசித்து வந்த கைலி கட்டிய ஒரு தாடிக் கிழவனையும் குடிசை - தோட்டத்துடன் அடித்துக் கொண்டு வந்தது.

வெள்ளத்தின் வேகத்தினால் அரச மரம் சாய்ந்தது. வேப்ப மரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்ததினால் தண்ணீரில் மிதந்து ஆடிக்கொண்டிருந்தது. பிள்ளையாருக்கு ஓடவும் முடியவில்லை; ஓடவும் பயம்.

பிள்ளையாரின் துன்பத்திற்கு ஓர் எல்லையில்லை; நீக்க ஓர் வழியுமில்லை.

வெள்ளத்தில் உருண்டுவந்த தாடிக் கிழவன் வேப்ப மரத்தின் கிளைகளை எட்டிப் பிடித்து மேடையில் தொத்திக்கொண்டான்.


புதுமைப்பித்தன் கதைகள்

57