பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தங்கையம்மாள், ஊர் ஊராக ஆள்விட்டுத் தேட ஏற்பாடு செய்தாள். ஸிவில் வழக்கு ஆவேசத்திலிருந்த அவளுடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. வீணாகக் காலத்தைப் போக்கி, சொத்துச் சீரழிந்த பிறகு அத்தான் வந்தென்ன, அப்படியே ஆண்டியாகப் போயென்ன என்று நினைத்தார். ஆள்விட்டுத் தேடுவதை அப்புறம் பார்த்துக் கொள்வோம் என்பது அவரது கட்சி. ஊரிலே அவருக்குச் செல்வாக்கு உண்டு; செயலுண்டு. செண்பகராமன் பிள்ளையுடைய வாண்டுப் பயலுக்கு முறைப்பெண் என்ற பாத்தியதைக்கு வாண்டுப் பெண் ஒருத்தி அவருக்கு உண்டு. அவ்விருவருக்கும் செல்லக் கல்யாணம் செய்துவைத்துச் செண்பகராமன் பிள்ளை விளையாடியதனால் பிடி பலமாகத்தான் இருந்தது. அது இன்னும் கொஞ்சம் பலமாகுமென்ற நைப்பாசையும் உண்டு. அவருக்குப் பிடி மட்டும் பலம். உரிமையோ பாத்தியதையோ இல்லை. எதிர் பாத்தியதைக்காரனுக்கு ஒரு வகையில் உரிமை இருந்தாலும் ஊர் தன் பக்கந்தான் சேரும் என்ற பலத்த நம்பிக்கை அவருக்கு உண்டு.

2

செண்பகராமன் பிள்ளை காவி போட்டுக்கொண்டு பக்கத்துச் சத்திரம் வரையில் நடந்தார். அங்கே சாப்பிடவில்லை. உடம்பிலே ஒரு தெம்பு, மனசிலே ஒரு கலகலப்பு. காரணம் அற்ற சந்தோஷம் என்று தான் சொல்ல வேண்டும்; சிட்டுக்குருவி மாதிரி, அவருக்கு இந்தத் தீர்க்கமான காரியம் இவ்வளவு சுளுவில் கைகூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதே இல்லை. கண்ணீரும் அழுகையும் வழிமறிக்கக் கூடும். ஊரார் வந்து நின்று எழுப்பும் கௌரவம் என்ற மதில்களைத் தாண்ட முடியாது போய்விடக் கூடும் என்ற அச்சம் அவருக்கு இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒன்று: யாரோ ஒருவர் கணீர் என்ற குரலில் "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிடுவது போன்ற தோற்றம் அவரைப் பலமுறை ஏமாற்றியதுண்டு. சில சமயம் காலமாகிவிட்ட அவருடைய தகப்பனாரின் குரல் போலக் கேட்கும்.

முன்பு எப்பொழுதோ ஒரு முறை, நடுநிசிப் போது, வாலிபம் குன்றாத காலம், மனைவியுடன் சல்லாபமாகப் பேசிக் கட்டித் தழுவும் சமயத்தில், யாரோ ஜன்னலுக்கு வெளியே வந்து நின்று, "அப்பா, செண்பகராமா!" என்று கூப்பிட்டது போலக் கேட்டது. "அப்பாவா? இதோ வருகிறேன்" என்று தழுவிய கையை வழுவவிட்டு, எழுந்து வெளியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். வந்து, வெளியே வெறிச்சோடிக் கிடந்த பட்டகசாலையில் நின்றபொழுதுதான் 'இதென்ன முட்டாள்தனம்!' என்ற பிரக்ஞை எழுந்தது. குரலும் தகப்பனாருடையது போல இருந்தது என்ற புத்தித் தெளிவு போன்ற ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. இவர் குரல் கொடுத்துக் கொண்டு எழுந்து சென்ற நிலையில் உடலும் மனமும் கூம்பிப் போன மீனாட்சியம்மாள், "அப்பா செத்து அஞ்சு வருஷமாச்சே. இதென்ன தெய்வக் குத்தமோ, சோதனையோ" என்று நடுங்கிக் கொண்டு கேட்டாள். அவளைத் தேற்ற,

580

சித்தி