களத்து நெல்லை மடக்கிவிட வேண்டும், அப்பொழுது நல்லசிவம் பிள்ளையின் கொட்டம் அடங்கும் என்று மனப்பால் குடித்தார் ஆனையப்ப பிள்ளை. கோர்ட்டில் இன்ஜங்ஷன் வாங்கி அப்படியே நெல்லை மடக்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர் யோசனை பண்ணியிருப்பது வாண்டு வடிவேலு மூலம் மீனாட்சியம்மையின் காதுக்கு எட்ட, நல்லசிவம் பிள்ளை உஷாரானதில் அதிசயம் இல்லை. ஆனையப்ப பிள்ளை மருமகனைத் தன் வீட்டோடு கூட்டிப் போய் வைத்துக் கொண்டு அவன் படிப்பை மேற்பார்வை செய்யாவிட்டால் அவன் கெட்டுக் குட்டிச்சுவராகப் போவான் என்பதைத் தன் மனைவி மூலம் மீனாட்சியம்மைக்குச் சொல்லிவிட்டார். பையன் மீது உள்ள பாசத்தினால் அது சரியெனவே அவளுக்குப் பட்டது. "ஒங்க வீட்டு மருமகன் தானே? அவனை ஒப்படியாகப் பண்ணுவது இனி உங்க பொறுப்புத்தானே?" என்று பதில் சொல்லித் திருப்தி அடைந்தாள்.
கிராமத்திலிருந்து வந்த நல்லசிவம் பிள்ளை அக்கா என்று உறவு கொண்டாடிக்கொண்டு வந்து, "பிள்ளையை வேறு வீட்டில் விட்டு வைப்பது நமக்குக் குறைச்சல்; மேலும் ஆனையப்ப பிள்ளைக்கு இப்பொழுது கடன் தொல்லை அதிகம்; சிறுசை வைத்துக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறான்" என்று ஓதினார்.
"செண்பகராமன் பிள்ளையின் சம்பாத்தியம் மண்ணாங்கட்டியாகப் போகும்; முதலில் வடிவேலை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வா" என்று யோசனை சொன்னார்.
மீனாட்சி அம்மாளுக்கு அவர் சொல்லுவதும் சரியாகத்தான் பட்டது. அவனுடைய நன்மையை எண்ணி முத்துசாமியை உருப்படாமல் ஓட்டாண்டி ஆக்கிவிடுவதா என்று மனசு பொங்கியது. பகல் மூன்று மணிக்குத் தன்னுடைய நாத்தனார் வீட்டுக்குப் போனாள். பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலே கொட்டமடித்துக்கொண்டிருந்த வடிவேலைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தாள். "நான் மாமா வீட்டில்தான் இருப்பேன்" என்று வடிவேலு கத்தினான். அவளுடைய கைகளைப் பிறாண்டினான். ஆனால் அவளுக்கு பின்னால், 'ஓ ராமா' என்று படைப்பயம் போட்டுக்கொண்டுதான் தெரு வழியாக இழுபடவேண்டி இருந்தது.
நயினார் குளத்தங்கரையில் மாலை மயங்கும் சமயத்தில் ஆனையப்ப பிள்ளையும், நல்லசிவம் பிள்ளையும் சந்தித்துக் கொண்டார்கள். வார்த்தை தடித்தது; நல்ல காலம், உடல் தடிக்கவில்லை.
"உன் கொட்டத்தை அடக்குகிறேன்" என்றார் ஆனையப்ப பிள்ளை.
"செண்பகராமன் பிள்ளை ஊரிலே கண்ட மழுமாறிகளுக்குச் சொத்து சம்பாதித்து வைத்துவிட்டுப் போகவில்லை" என்று உறுமினார் நல்லசிவம் பிள்ளை.
"யாரடா மழுமாறி? செண்பகராமன் பிள்ளை சொத்து என்ன கொள்ளியற்றுப் போச்சு என்று நினைத்துக்கொண்டாயா?" என்று பதிலுக்கு உறுமினார் ஆனையப்ப பிள்ளை.
586
சித்தி