பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தடவை எட்டிப்பார்ப்பது, ஏட்டுக் கணக்குகளைப் பார்ப்பது, பிறகு 'ஒத்தி வைத்த' நலத்துக்காக சேவகம் செய்து சம்பளம் வாங்குவது, இப்படியே ஓடிய ரத்த பந்த சக்கரத்துக்குப் பின்னால் இழையாக அமைந்திருந்தார் சிவசிதம்பரம் பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளைக்குத்தான் ஆதி முதல் அந்த ஜவுளிக்கடையின் உட்கணக்குத் தெரியும்; கடையின் மேசைப் பெட்டி மாதிரி, புத்தியும் ஜீவனும் விவேகமும் உள்ள மேசைப் பெட்டி மாதிரி, அவர் இருந்து வந்தார்.

சிலர் பூட்டின் வாயிலேயே சாவியைத் தொங்கப் போட்டிருப்பார்களல்லாவா, அதேமாதிரி இந்த இளவட்ட முதலாளிகளும் இவரது மடியிலேயே சாவியைப் போட்டு வைப்பார்கள். அதாவது இவரது மடியில் அல்லது மூத்த பிள்ளை வள்ளியூர் லெச்சமணப்பிள்ளை பெட்டக சாலை கிழக்குச் சுவர் காந்தி படத்துக்குக் கீழே அல்லது சிவசிதம்பரம் பிள்ளை இடுப்பில் சாவி தொங்கிக்கொண்டிருக்கும். தான் உண்டு, தன் கணக்கு உண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பவராகையால் முதலாளிகளுக்கு இவர் யாரோ காவேரிப் பாசனத்து மருதூர் கார்கார்த்த வேளாளர் என்பது மட்டும் தெரியும். சிவசிதம்பரம் பிள்ளை அதற்கு மேல் யாரையும் தெரிந்துகொள்ள விடுகிறதில்லை. லேயன்னாவினுடைய மூத்த மகனுக்கு கணக்குத் தப்பாமலிருப்பதில்தான் குறி. யாராயிருந்தால் என்ன; பேசுகிற பேரேடு என்று நினைத்து, அதற்குமேல் அவரைப் பற்றிச் சிந்திக்கிறதில்லை. அவர் 'மெட்டிக்கிலேஸனுக்கு' ஒரு வகுப்பு முந்தி தோத்துப்போய் பள்ளிக்கூடத்துடன் 'கத்திகிட்டு' வந்துவிட்ட காலம்; மைனர் பிள்ளையாக நடமாடுவதற்கு சற்று கால் தள்ளாட ஆரம்பித்தபோது, சிவசிதம்பரம் பிள்ளையின் 'உத்தியின்பேரில்' ஒரு தாலியும் கட்டி, வீட்டோ டு கட்டிப்போட்டு மேல ரத வீதி ஜவுளிக்கடை சொருகு பலகைகளுக்குள் சென்று வெளிவரும் சரக்கானார்கள். லேயன்னா கண்ணை மூடிய பிறகுதான் அவர் முதலாளி ஸ்தானத்துக்கு வந்து அப்பால் சென்று உலாவும் சரக்காகப் பரிணமித்தார். லேயன்னா கண்ணை மூடும்போது, "செலம்பரம், செலம்பரம்" என்ற ஜெபந்தான். பிரிவு, கடையைப் பிரித்துவிடாமல் சிவசிதம்பரம் பிள்ளைதான் இருந்து லேயன்னா கடைப் பங்கு வகையராவையும், கன்னடியன்கால் பாசன நன்செய் வகைகளையும் ஈவு செய்து மக்களுக்குள் குடுமிப்பிடி வராமல் பார்த்துக் கொண்டார்.

கடை மேற்பார்வை பிறகு மேயன்னா வசம் இருந்து, அவர் காலத்துக்குப் பிறகுதான் லேயன்னாவின் மூத்த மகன் வசம் திரும்பியது. மேயன்னாவுக்கு வில்லங்க சொத்துக்கள் கொஞ்சம் உண்டு. அதைத் திருப்புவது, அகப்படுகிற சாமியார்களை எல்லாம் கும்பிட்டு ரசக்கட்டு சோதனையில் இறங்குவது தவிர வேறு எதிலும் நாட்டம் செலுத்த ஜீவிய காலம் முழுவதிலும் சவுகரியமே கிடைத்ததில்லை. மண்ணாந்தைச் சாமியிடம் வாகடநூல் சோதனையிலீடுபட்டிருக்கும் போதுதான் வீரபாகு பிள்ளை வந்து "நம்ம சவுந்தரத்தை, பழமலைக்குக் கட்டிப்போட்டு விடலாம் என்று நினைப்பதாக"ச்

592

சிவசிதம்பர சேவுகம்