சொன்னார்கள். "அதுக்கென்ன சவுகரியப்படி செய்யிங்க, ரசத்தை மொறையாக் கெட்டினா, அட்டதிக்கும் கட்டியாளலாம், சாமி சொல்லுதாக" என்றார் மேகலிங்கம் பிள்ளை. "அட்ட திக்கும் கட்டியாளுவது அப்புறம் இருக்கட்டும், ஒங்க கேசு நாளைக்கு வருதாமே, அதுக்கு என்ன செய்ய உத்தேசம்" என்றார் வீரபாகு பிள்ளை. "செலம்பரத்தை வக்கீல் ஐயரிடம் அனுப்பி இருக்கேன். எல்லாம் அவன் பார்த்துக்கிடுவான். நம்ப சாமிக்கு கோவில் திருப்பணி செய்யணும்னு நாட்டம்; வடக்குப் பிரகார பொற்றாமரைக் கொளத்துப் படிகளை எடுத்துக் கட்டினா என்னான்னு கேக்கராஹ" என்றார் மேகலிங்கம் பிள்ளை. "ஆமாம் உங்களுக்கு வேலையும் தொளிலும் இல்லை, ரசத்தை கெட்டட்டா குளத்துப்படியைக் கெட்டட்டா என்று கருத்துப் போகுது! மொதல்லெ, ஒங்க பொண்ணுக்கு வாசல்லெ வந்த வரனைப் பார்த்துக் கெட்டி வையுங்க" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார் வீரபாகு பிள்ளை.
லெச்சுமணப் பிள்ளை ஜேஷ்டகுமாரன் பழமலைக்கும், மேகலிங்கம் பிள்ளை புத்திரி சவுந்தரத்துக்கும் கல்யாணமாயிற்று. பழமலை பழையபடி வரட்டு வேளாளனானான். மண்ணாங்கட்டிச் சாமிக்கு கோவில் திருப்பணிக்குத் தொகை கிடைத்தது. வக்கீலய்யருக்கு வழக்கை ஈரங்கி ஒத்திப்போட்டு சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டு போக சவுகரியம் கிடைத்தது.
லேயன்னா காலமானார். கடையை மேகலிங்கம் பிள்ளை பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்றார் வீரபாகு பிள்ளை. அவருக்கு ஜில்லா போர்ட் ரஸ்தா குத்தகை, தலைக்கு மேல் வேலையாக இருந்தது. யாரையாவது கெடுப்பது என்றால் மண்ணை வாரிப்போடுவது என்பது, யாரையும் கெடுத்தல் என்பதுதான் தமிழில் வெகுஜன வாக்கு. வீரபாகு பிள்ளை ரோடின் தலையில் கப்பிக் கல்லையும் மண்ணையும் வாரி வாரிப் போட்டுக்கொண்டே இருந்தார்; பிறகு அதில் மறுபடியும் ரிப்பேர் நடத்த லாயக்காக பஸ் செர்விஸ் நடத்தினார். அதனால் மேகலிங்கம் பிள்ளை கடையைப் பார்த்துக் கொள்ளுவதுதான் முறை என்ற நியாயம் அவருக்குப் புரிந்தது.
மேகலிங்கம் பிள்ளை கடைக்கும் வந்து போகலானார். மண்ணாந்தைச் சாமியாரும் கோவில் திருப்பணிகளில் ரொம்ப ஊக்கம் காட்டினார். இப்படிக் கொஞ்ச காலம் சிதம்பரம் பில்ளையின் விசுவாச பாத்திரம் சற்று மாறியது.
இப்பொழுது சிவசிதம்பரம் பிள்ளை இகபர சுகங்கள் இரண்டுக்காகவும் பண வசூலுக்குப் புறப்படுவார். ஒன்று கடை வரவு செலவு, இன்னொன்று திருக்குள வரவு செலவு. அவர் இவ்விரண்டு சேவகங்களையும் பகிர் நோக்கு இல்லாமலேயே கவனித்தார் என்றால் நிஷ்காம சேவையில் அவருக்கு இருந்த அளவு கடந்த மனப்பக்குவத்தால் அன்று; அவருக்கு அப்படி ஒரு பிரயோகம் இருப்பதாகவே தெரியாது. பிரதிப் பிரயோசனம் எல்லாம் ஜவுளிக்கடை பசியாற்று-
புதுமைப்பித்தன் கதைகள்
593