பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெரியாது. நிச்சிந்தையாகப் படித்துறை கட்டிக்கொண்டு இருக்கிறார்; அதாவது, செத்துப்போன உடலத்துக்கு ரணசிகிச்சை செய்து, பாண்டேஜ் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி சட்டத்தின் அடித்தளத்திலே அமைந்த சர்க்காரின் நிழலுக்குள்ளேதான் சாமியே தஞ்சமாகிவிட்டார். இன்று அவரைப் பட்டினி போடலாம்; அவர் கணக்கை ஆடிட் செய்யலாம்; ஆனால், பட்டினி கிடக்கும் மனுஷனுக்கு ஐயோ பாவம் என்றிரங்கி, கால் காசு எடுத்துப்போட அவர் நினைத்தால் அவருடைய கையை முறித்துப் போடுவார்கள். அவருக்குக் குளிக்க குளம் வேண்டாமா? அவருடைய பக்தர்களின் மனப்பாசியை அகற்ற பொற்றாமரைக் குளம் வேண்டாமா? சிவசிதம்பரம் பிள்ளை நிச்சிந்தையாகக் குத்துக்கல்லில் உட்கார்ந்து குளப் படி கட்டிக் கொண்டிருக்கிறார். டொங் டொங் என்று சிற்றுளிச் சத்தம் ஆயிரக்கால் மண்டபத்தில் எதிரொலிக்கிறது. ஐந்து பெண்களுக்குக் கலியாணம் இன்னும் ஆகவில்லை என்று அது எதிரொலிக்கிறது. அந்த சத்தம் அவருக்கு மனசில் அந்த நினைப்பை அகற்றுகிறது. பற்றில்லாமல் திருப்பணி செய்து, மறுபிறவியில் கிடைக்கும் செல்வத்தைக் கொண்டுவந்து இவர் கலியாணம் செய்து வைப்பார் என்று மக்களனைவரும் காத்துக் கொண்டிருந்துதான் முடியுமா? தெய்வம் சிருஷ்டித்ததே ஒழிய தர்ம சாஸ்திரத்தையும் கையில் எழுதி நம் கையோடு கொடுத்தனுப்பியதா? இவர்களது கலியாணத்துக்கு தெய்வம் எப்படிப் பொறுப்பு? கொஞ்சம் பொய் சொன்னால், முதல் மக்கள் கலியாணத்தைக் கூட முடித்துவிடலாம். அப்புறம் மண்ணாந்தைச் சாமி மாதிரி ஓடுவதற்கு சிவசிதம்பரம் என்ன, கால்கட்டு இல்லாத நபரா?

சிற்றுளி டொங் டொங் என்று ஒரு நாதத்தை எழுப்பி அந்த லயத்தில் மனப்போக்கை மிதக்க விட்டது. சிவசிதம்பரம் பிள்ளை தாடியை நெருடிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார்.

"ஐயா, ஒங்க முதலாளி ஐயா தவறிப் போனாக தெரியுமா? மோட்டார் மரத்திலே மோதி, ஒங்க வீரபாகு பிள்ளைதான். என்ன ஒரு மாதிரி" என்றது ஒரு குரல்.

"இன்னும் ஒரு வரிசைதான் பாக்கி, இன்னம் இருநூற்றி ஐம்பது இருந்தால் போதும்" என்றார் சிவசிதம்பரம் பிள்ளை.


தமிழ்மணி (பொங்கல் மலர்), 1944

596

சிவசிதம்பர சேவுகம்