"நீங்கள் சொல்றது வாஸ்தவம்தான். நம்ம ஜனங்கள்னு நான் சொல்லவறப்போ, இங்கிலீஷ் படித்த நம்ப ஜனங்களைத்தான் சொன்னேன். அவாள் ரஸித்தால்தான் உங்களுக்குப் பேர் வரும். அதற்கு நான் ஒரு வழி சொல்றேன்; உங்கள் கதைகளை இங்கிலீஷில் நான் மொழிபெயர்த்துச் சீமைக் கம்பெனியில் பிரசுரிக்கிறேன்; அப்புறம் உங்களுக்கு உலகப் புகழ் வராத போனா..."
விவகாரம் தம் கையைவிட்டுத் தாண்டிவிடுமோ என்று பயந்த எல்.எஸ்.பி., "நான் இன்னொன்னு உனக்குச் சொல்ல மறந்து போச்சே... இதோ காப்பி வந்துட்டுது, முதல்லெ சாப்பிடு" என்று ஸர்வரிடம் இருந்த ஓவல்டினை வாங்கி மரியாதையாக ஆற்றிப் புரொபெஸரிடம் கொடுத்துவிட்டு, "கிட்டு, நம்ப ஸாரிடம் முதல்லெ ஊத்தப்பத்தை எடுத்து வையடா; என்ன, முறுகலாக் கொண்டாந்தியா? காபியெ அப்படியே ஆத்தாமே பெஞ்சிலே வய்யி. எங்கே ராமலிங்கம், இப்படி வெத்திலையெ எடுத்தா" என்றார் எல். எஸ். பி.
"சீமையிலா! என் புஸ்தகமா?" என்ற பெருமிதத்தில் எதிரில் இருந்த கண்ணாடி அலமாரியில் தோன்றிய மங்கிய பிம்பத்தைப் பார்த்துத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட வி.பி.க்கு ஊத்தப்பத்தில் விசேஷ ருசி தென்பட்டது. புரொபெஸரது மேதையும் ஊத்தப்ப ருசியும் தம்முள் எது பெரியது என்பதற்காக அவரது மன அரங்கில் போட்டியிட்டன.
"நம்ம புரொபெஸர் தமிழிலே லிட்ரரி கிரிட்டிஸிஸம்னா என்னான்னு ஒரு புஸ்தகம் எழுதப் போறார்; அதுவும் நம்ம கம்பெனிக்கு எழுதப் போறார்; அதிலே தமிழ்ப் புது இலக்கியம் என்பது பற்றி ஒரு அநுபந்தமும் உண்டு" என்றார் எல்.எஸ். பி.
"சபாஷ்! இப்பொ அதுதான் வேணும், வாசிக்கிறவாள் எல்லாம் மாடு பருத்திக்கொட்டை தின்கிற மாதிரி, எதையானாலும் விதரணை இல்லாமல் வாசிக்கிறா."
"மாடு பருத்திக்கொட்டை தின்கிறாப்போலே, என்ன அபூர்வமான கற்பனை!..." என்று கண்ணை மூடிக்கொண்டு அந்த 'அபூர்வ கற்பனை'யை அசைபோட்டார் புரொபெஸர்.
"என்ன வி.பி. மணி பத்தரை ஆயிட்டுது. லாஸ்ட்டு பஸ் போயிடப்படாது; நீ எதுக்கு வந்தேன்னு தெரியும்! நாளைக்குப் பத்து மணிக்கு இந்தப் பக்கமா வா..." என்றார் எல்.எஸ்.பி.
"என்னடா எல்.எஸ்.பி. என்னை ஒனக்குத் தெரியாதா? நாளை இல்லாட்டா, நாளன்னிக்கே வர்றேன்; வெளியே ஒரு நிமிஷம்..." என்று கொண்டே எழுந்து நடையைத் தாண்டி நின்றார்.
எல்.எஸ்.பி. நடைவாசலில் நின்றார்.
"ஒரு எயிட் அனாஸ் இருந்தாக் குடு" என்றார் எழுத்தாளர்.
606
நிசமும் நினைப்பும்