பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தகத்தையும் சிலுவையையும் கட்டி, வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்கவிட்டு விட்டு ஒரு சிறிய சல்லடத்தை மாத்திரம் அணிந்து கொண்டு கவிழ்ந்து கிடந்த படகின் மேல் உட்கார்ந்து வேப்பங்காற்றையனுபவித்துக் கொண்டு இருந்தான். பொழுதுபோக்குக்காக கையில் இருந்த உடைவாளைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது பல கிழவர்கள் வந்தார்கள்.

மேடையையும் பிள்ளையாரையும் அரச மரத்தையும் கண்டவுடன் பீதியடித்துப் போய்விட்டார்கள்.

சிலர் அரச மரத்தைத் தூக்கி நிறுத்த முயன்றார்கள்.

சிலர் பிள்ளையாரின் கழுத்தை விடுவிக்க முயன்றார்கள்.

சிலர் மேடையை சீர்படுத்தினார்கள்.

ஒவ்வொருவர் செய்வதும் மற்றவர்களுக்கு தடையாக இருந்தது.

பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றிய வேப்ப மர வேரையறுக்கப் போனால் புதிதாக வந்தவன் வாளை ஓங்குகிறான்.

அரச மரத்தின் கிளைகளை வெட்டப்போனால், பிள்ளையாரின் உதவியால் மரம் நிற்கிறது. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்து விடும், இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், சற்று பொறுத்துச் செய்யுங்கள் என்றார்கள்.

சிலர் மரங்களையே எடுத்துவிட்டால் நல்லது என்று நெருங்கினார்கள்.

இரைச்சல் அதிகமாகிறது.

மரத்திற்கு பிள்ளையாரா, பிள்ளையாருக்கு மரமா என்ற பெரிய தர்க்கம்.

ஆத்திரமுள்ளவர்கள் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் அழித்துவிட பதைத்து நெருங்கினார்கள்.

உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது.

விச்வரூபமா?

பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா?

அல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக் கொள்ளுவாரா?

மணிக்கொடி, 22 / 29.04.1934


60

புதுமைப்பித்தன் கதைகள்