பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அனுப்பிச்சுட்டா ரொம்ப ஒத்தாசெயா இருக்கும்; புஸ்தகம் சீக்கிரம் வெளிவந்தால் எல்லாருக்கும் சவுகரியந்தானே?" என்று எழுதியிருந்தது.

"புரூப் எங்கே?" என்றார் வி.பி.

ராமலிங்கம் பேசாமல் எடுத்துக் கொடுத்தான்.

பேசாமல் எழுத்தெழுத்தாகப் பார்த்துத் திருத்திக் கொடுக்கலானார் எழுத்தாளர்.

மனசு ஒரு புதுமாதிரியான சுரம் பேச ஆரம்பித்தது.

நேத்துச் சோமாறிப் பயல் மாதிரி இந்த ராமலிங்கத்துடன் மல்லுக்கு நிற்காமல் உறுதியைக் காட்டினதுதான் செக்கும் பணமும் காலையில் சிட்டாகப் பறந்து வந்திருக்கிறது. ராமலிங்கம் என்ன பெட்டிப் பாம்பாக உட்கார்ந்திருக்கிறான்! என்ன மரியாதை! தாராளமாகப் பேசக்கூடப் பயப்படுகிறானே! இதுக்குத்தான் ஆத்ம சக்தின்னு பேரு. அறிஞ்சுதான் அஹிம்சையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் மகாத்மா. எனக்கு நேத்தே இந்த மாதிரிதான் நடக்கும்னு தெரியும்.

"என்ன ராமலிங்கம், உங்க பிரஸ்காரனுக்கு 'வந்தால்தான்' என்று எழுதினால் ஏன் இத்தனை தடவை திருத்தினாலும் இரண்டு வார்த்தை மாதிரி ஸ்பேஸ் போட்டு வைக்கிறான்? முதல் புரூப், இரண்டாவது புரூப், இப்போ கடைசி பாரம் புரூப். எல்லாத்திலேயும் ஒரே மாரடிப்பாக இருக்கு."

"மெட்ராஸ் பிரஸ்களில் எல்லாம் கம்பாஸிட்டர்கள் அப்படித்தான் போட்டுத் தொலைக்கிறான். என்ன எழவைப் பண்ணுகிறது..."

"எப்படியோ பார்த்துச் செய்; இந்த வாரக் கடைசியிலே புஸ்தகம் வந்து விடாது?" என விரல்களைச் சுடக்கு முறித்துக் கொண்டே கேட்டார்.

"ஏன், வெள்ளிக்கிழமையே வந்துடும். வெள்ளிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்குப் புஸ்தகம் ரெடியாயிடும்..."

"ராமலிங்கம், ஒரு நிமிஷம் இரேன், காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்; நான் தலையில் தண்ணியைக் கொட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்."

"இல்லெ ஸார்; எனக்கு வேலை இருக்கு; மாம்பலம் போகணும்..."

"அடே ஒரு நிமிஷம் இருடான்னா; என்னிக்கோ ஒரு நாள் தான் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, வேகமாக மாடிப்படி வழியாக இறங்கினார் எழுத்தாளர்.

"நீயா கூப்பிடுகிறாய்..." என்று யாரும் இல்லாத அறையில் சிரித்துக் கொண்டான் ராமலிங்கம்.

4

வீட்டுக்கார முதலியாரவர்களுக்கு,

அநேக கோடி நமஸ்காரம். தாங்கள் நான் வீட்டில் இல்லாத

612

நிசமும் நினைப்பும்