பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எப்போதும் முடிவிலே இன்பம்


து மிகவும் ஆசாரமான முயல் - நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து வந்தது.

அந்த முயல் எலியட்ஸ் ரோடில் உள்ள ஒரு கலெக்டர் பங்களாவில் வசித்து வந்தது. வெகு காலமாகத் தான் வசிக்கும் இடம் ஒரு கலெக்டரின் பங்களா என்பது அதற்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொண்ட பிற்பாடு அதற்குப் பெருமை சொல்லி முடியாது. வனராஜனான சாக்ஷாத் மிருகேந்திரனே போல அதன் நடையில் மிடுக்கு ஏற்பட்டது. உலகத்தில் தன்னை ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் அருகதை இல்லை என நினைக்கவும் ஆரம்பித்து விட்டது அந்த முயல்.

தான் வசிப்பது கலெக்டர் வீடு என்பதை அது அறிந்து கொண்ட வரலாற்றை ஒரு ரசமான இதிகாசம் என்று சொல்ல வேண்டும். கலெக்டர் யுகத்தில் இதிகாச கர்த்தர்களுக்கு இடம் இல்லாமல் போனது இதிகாச கர்த்தர்களின் துரதிருஷ்டமே தவிர முயலின் துரதிருஷ்டம் என்று அதன்மேல் பழி சாற்ற முடியாது. ஏனென்றால் ஜோதிஷர்கள் சொல்லக்கூடிய மிக மிகச் சிறந்த நக்ஷத்திரத்தில், அதற்கு மேலான சிறந்த லக்கினத்தில் பிறந்த முயல் அது. அதன் ஜன்ம லக்கினத்தைப் பற்றியோ, அதன் அதிருஷ்டத்தைப் பற்றியோ சந்தேகப்படும் மனப்பாங்கு படைத்தவர்கள் ஜோதிஷ சாஸ்திரத்தையே அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாலு வேதமும் ஆறு சாஸ்திரமும் படித்திருந்தால்தான் என்ன? முயல் முயல்தானே? அதன் குணம் போய்விடுமா? சமண சந்நியாசிகள் பாறைகளில் குடைந்த நிலவறைகள் மாதிரி தோட்டம் முழுவதிலும் குடைந்து வளை போட்டுவிட்டது. முன் 'கேட்' அருகில் உள்ள ரோஜாப் புதரின் பக்கத்தில் உள்ள வளையில் குதித்து மறைந்தது என்றால், புழைக்கடையில் சுற்றிச் சுவர் ஓரத்தில் உள்ள கறிவேப்பிலைச் செடிக்கு அருகில் உள்ள குண்டுக்கல்லுக்குக் கீழிருந்து அது வெளியே வரும். இது தவிர அதன் நிலவறைகள் தரையில் திக்குக்கு

புதுமைப்பித்தன் கதைகள்

615