பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்குத் தேவனின் தர்மம்


முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள் போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ, ரங்கூனிலிருந்து திடீரெனத் தோன்றும் தமயனின் ஐசுவரியத்தினாலோ, கோடீசுவரியாகிவிடவில்லை. வறுமையில் குசேலரின் தமக்கை. சமயக் குரவர்கள் இயற்றும் அற்புதங்கள் என்ற செப்பிடுவித்தைகள் நடவாத இந்தக் காலத்தில் அவள் தினந்தினம் காலந்தள்ளுவதுமல்லாமல், தனது ஒரே குமாரத்திக்கு விவாகம் செய்யவும் ஆரம்பித்ததுதான் அற்புதத்திலும் அற்புதம்.

நமது ஹிந்து சமூகத்தின் பழைய உலர்ந்துபோன கட்டுப்பாடுகளின் கைதிகளாக ஏழைகள்தாம் தற்போது இருந்துவருகிறார்கள். ஏழ்மை நிலைமையிலிருக்கும் பெண்கள் கொஞ்சக் காலமாவது கன்னிகையாக இருந்து காலந்தள்ள ஹிந்து சமூகம் இடந்தராது. இவ்விஷயத்தில் கைம்பெண்களின் நிலைமையைவிட கன்னியர்கள் நிலை பரிதாபகரமானது. மிஞ்சினால் விதவையை அவமதிப்பார்கள், ஆனால் ஒரு கன்னிகையோவெனின் அவதூறு உலகத்தின் நிஷ்டூரம் என்ற சிலுவையில் அறையப்படுவாள். பணக்காரர்களான பூலோகத் தெய்வங்களின்மீது சமுதாயக் கட்டுப்பாட்டின் ஜம்பம் பலிக்காது. இவ்வளவும் முத்தாச்சிக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ வின்டில் (windle) துரை பங்களாவில் பங்கா இழுக்கும் மாடசாமி பிள்ளைக்குத் தன் மகளைக் கொடுக்க நிச்சயித்து விட்டாள். நாளை காலையில் கலியாணம்.

சாயங்காலம் ஐந்தரை மணியிருக்கும். முறுக்குப் பாட்டி தங்கவேலு ஆசாரியின் வீட்டுத் திண்ணையில், சுவரருகில் சாய்ந்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறாள். செம்பாதி நரைத்த தலை, ஜீவியத்தில் பட்ட கஷ்டங்களைப் படம் (Graph) போட்டுக் காட்டுவது போல் கோடுகள் நிறைந்த முகம், [1]பாம்படமில்லாது புடலங்காய்த் துண்டுகள் மாதிரித் தொங்கும் காதுகள், 'இந்திரன் கலையாய் என் மருங்கிருந்தான்' எனக் காணப்படும் சம்பிரதாயமாய்ப் புடவை என்ற இரண்டு வெள்ளைத்


  1. பாம்படம் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் பெண்கள் காதில் அணியும் ஓர் ஆபரணம்.


புதுமைப்பித்தன் கதைகள்

61