பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/622

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாய் அகன்றதும், காய்கறித் தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு இணுக்குக் கீரையும் நல்ல டொமாட்டோ ப் பழமாக இரண்டும் சாப்பிட்டு ஏப்பமிட்டுக் கொண்டு, கீரைப் பாத்திக்கு அருகில் இருந்த வளை வழியாக ஓடி மறைந்தது முயல்.

பக்கத்துப் பங்களா ஒரு ஜமீன்தாருடையது. பறை நாயை உள்ளே வரும்படி விடுவார்களா? நாலைந்து வேலைக்காரப் பையன்களும் ஒரு கோம்பை நாயுமாகச் சேர்ந்து விரட்ட, வாலைக் காலிடையில் பதுக்கிக் கொண்டு அழுதுகொண்டே ஓடி வந்துவிட்டது கறுப்பு நாய்.

முயல் சொல்லி அனுப்பின காரியத்தைக் கேட்டு வருவதற்குக்கூட முடியவில்லையே, அதன் முகத்தில் எப்படி விழிப்பது என்று குன்றிப் போய், பங்களாவுக்குள் நுழைந்த சமயத்தில் பட்டப் பகலாகிவிட்டது. சாப்பாட்டுக்காக, தோட்டக்காரன் குடிசைப் பக்கமாகப் போயிற்று. சாப்பிடும் தட்டை மோந்து பார்த்தது. வெறும் தட்டுதான் கிடந்தது. தனக்கு வேலைதான் போய்விட்டதோ என்று பதறியது. அதற்குப் போட்டிருந்த தீனியை நரி ஒன்று தின்று நடந்துவிட்டது அதற்கு எப்படித் தெரியும்?

3

அன்று இரவு நல்ல நிலா. சற்றுச் சுகமாக உலாவி வருவோமே என்று நினைத்து வேத வித்தான முயல் வெளியே புறப்பட்டது. மனசுக்கு இன்பமாக இருக்கவும் சாந்தம் ஏற்படவும் சாமகானம் பாடிக்கொண்டு எங்கெங்கோ நடந்தது. சிறிது நேரம் கழித்து எவ்வளவு தூரம் நடந்துவிட்டோ ம் என்று சுற்றுமுற்றும் பார்க்க, தூரத்தில் முயலினி ஓர் இலையைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து 'என்ன லாவண்யம்! என்ன அழகு!' என்று அப்படியே சொக்கிப் போய் நின்றது. பிறகு குண்டுகுண்டென்று ஓடி அதனிடம் நெருங்கி, "முயலினி, உன் கோத்திரம் என்ன?" என்று கேட்டது.

"உங்கள் கோத்திரந்தான்" என்று சொல்லிவிட்டு வேறு ஓர் இலைக்குப் போயிற்று முயலினி.

"இத்தனை பிரயாசைப்பட்டும் என் ஆசை எல்லாம் பாழாய்ப் போயிற்றே!" என்று பெருமூச்சுவிட்டது முயல்.

"இல்லை, விளையாட்டுக்குச் சொன்னேன். உங்கள் கோத்திரம் இல்லை" என்று கண்ணை ஒரு வீசு வீசிவிட்டு வேறு ஒரு தளிரை மென்றது முயலினி.

"என் கோத்திரம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டது முயல்.

"காதலுக்குக் கண் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?" என்று புன்சிரிப்புச் சிரித்தது முயலினி.

"இன்னிக்கு ஒரு ஆளை உன்னிடம் அனுப்பினேனே, வந்து விசாரித்தானா?" என்று கேட்டது முயல்.


புதுமைப்பித்தன் கதைகள்

621