கபாடபுரம்
1
கடல் கொண்ட கோவில்
நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும்.
நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட்டுவிடுவார்களா? கல்லில் உறையும் கன்னி எனில், திரிகால பூஜையும் ஆர்ப்பாட்டமும் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, சற்றும் சஞ்சலமற்று நடந்து விடுகிறார்கள். என்ன மனிதர்கள், என்ன பிழைப்பு!
நான் உள்ளுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டேன். கல்லில் வடித்திருந்த உருவத்தில் மனசை லயிக்கவிட்ட எனக்கு, அந்தக் கோயிலில் அந்த அர்த்த ஜாமத்தில் இப்படி எண்ணமிட்டுப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்த ஒரு காரியமா அல்லது... அதற்கும் அப்பால், அதற்கும் அப்பால் என வெங்காயத்தோல் உரித்துகொண்டுபோவது போல் மனித அறிவு என்ற ஸ்பரிசம் படப்பட மற்றொரு திரையிட்டுவிட்டு, அதற்கும் அப்பால் அகன்று சென்றுகொண்டே இருக்கும் அந்த விவகாரத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்ச்சியா என என்னால் நிர்ணயிக்க முடியவில்லை.
புதுமைப்பித்தன் கதைகள்
627