பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துண்டுகள் (ஒரு காலத்தில் வெள்ளையாயிருந்தவை) இவள் பணக்காரியல்லள் என்பதை இடித்துக் கூறின. கையிலிருந்த உலர்ந்த வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, அதற்குத் துணையாக ஒரு நீளத்துண்டுக் கருப்பட்டிப் புகையிலையையும் உள்ளே செலுத்தி, கைகளைத் திண்ணையில் துடைத்துவிட்டு, "ஆசாரியாரே! என்ன? வேலையெ சுருக்கா முடியும். மோசம் பண்ணிப்பிடாதீரும்!" என்றாள்.

"ஆச்சி! பயப்படாதே, பொழுது சாயிரத்துக்கு மின்னே ஒன் வேலெ முடிஞ்சிடும்!" என்று, தன் கையிலிருந்த பாம்படத்திற்கு மெருகிட்டுக் கொண்டே தேற்றினான் தங்கவேலு ஆசாரி. போன மூன்று மாத காலமாக மாதாந்தரம் நடந்து, அன்று விடியற்காலை முதல் உண்ணாவிரதமிருந்த முறுக்குப் பாட்டிக்கு இது ஆறுதலளித்ததோ என்னவோ - ஒரு பெருமூச்சுத்தான் வந்தது.

பிறகு சில நிமிஷங் கழித்து, புன்னகையுடன், "நான் கைலாசவரத்துக்குப் போகணும், வழி காட்டுப் பாதை, இன்னம் நான் போய்த்தான் மேலெ வேலையைப் பாக்கணும். எல்லாம் அப்படி அப்படியே கெடக்கு" என்று பின்னும் துரிதப்படுத்தினாள்.

"ஒன் வேலெ அண்ணைக்கே முடிஞ்சிடும், அந்தச் சிறுகுளம் சுப்பையர் வேலை வராட்டா. அவர்தான் விடேன் தொடேனுன்னு அலஞ்சு சாமானை நேத்துத்தான் வாங்கிக்கிட்டுப் போனார். இல்லாட்ட ஒரு நொடிலெ; இதென்ன பெரிய காரியமா? அது சரிதான், இருக்கட்டும் ஆச்சி. ஒன் வீட்டிலே இதுதானெ முதல் கலியாணம். செலவு என்ன ஆகும்?" என்று பேச்சையிழுத்தான் ஆசாரி.

"என்னமோ, ஏளெக்கு ஏத்தாப்பிலே, எல்லாஞ் சேந்து ரெண்டு நூறு ஆகும்" என்றாள்.

"நகை எம்பிட்டு?" என்று மீண்டும் பேச்சைப் பெருக்கினான் ஆசாரி.

"எல்லாமென்ன, அந்த எங்க வீட்டுக்காரர் போனாரே அவர் போட்டதுதான். என்ன, ரெண்டு மோருதம், இப்பொ நீர் அழிச்சுப் பண்ணற ஒரு சோடு பாம்படம், வேறு செலவு என்ன, ஒரு அம்பது அது கெடக்கட்டும், வேலெ என்ன இப்பொ முடியுமா?" என்று மீண்டும் ஒருமுறை கேட்டாள்.

"இதோ! நீதான் பாத்துக்கொண்டிருக்கயே! ஏங் கைக்கிச் செறகா கட்டியிருக்குது? வேலையெ ஓட்டத்தான் செய்யிரேன். அவசரப்படாதே... நீ இந்தச் சமுசாரத்தைக் கேட்டியா? ஊருலெ களவுங் கிளவுமாயிருக்கே? அண்ணைக்கி நம்ப மேலப் பண்ணை வீட்டிலெ 2000த்துக்குக் களவாம்! காசுக் கடெ செட்டியாரு பத்தமடைக்கிப் போயிட்டு, வட்டிப் பணத்தை மடிலே முடிஞ்சுக் கிட்டு வந்தாராம், மேலேப் பரம்பு கிட்ட வாரப்போ, பொளுது பலபல இண்ணு விடியராப்பிலே, வந்து தட்டிப் பறிச்சுக்கிட்டுப் போயிட்டான்! செட்டியாரு வயித்தில அடிச்சுக்கிட்டு வந்தாரு. காலங் கெட்டுப் போச்சு! இதெல்லாம் நம்ம கட்டப்ப ராசா காலத்துலெ நடக்குமா?" என்றான் ஆசாரி.


62

புதுமைப்பித்தன் கதைகள்