பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அது இதைவிட சற்றுத் தாழ்ந்தது. மறுபடியும் கீழே இறங்கிவிட்டால் அதில் ஏறுவது எப்படி என்று நான் தடுமாடிக்கொண்டு வரும்போது கிழக்குச் சரிவில் படிக்கட்டுகள் தென்பட்டன. எந்த யுகத்து மனிதர்கள் செதுக்கி வைத்ததோ! அதிசயப்பட்டுக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக இறங்கினேன். கால்கள் சற்று வழுக்கத்தான் செய்தன. மனசில் உள்ள வேகந்தான் என்னை இழுத்துச் சென்றது. படிக்கட்டுகள் மறுசரிவில் உயர ஏற ஆரம்பித்தன. சுமார் ஐம்பது படிக்கட்டுகள் தானிருக்கும். கோயிலிருந்த குன்றின்மேல் கொண்டுவிட்டது. கரையைத் திரும்பிப் பார்த்தேன். எங்கோ எட்டாத் தொலைவில் ஒரு பெருங்குன்றின்மேல் சிகரமும் கிழக்கு வாசலும் தெரிந்தன.

நான் நின்றிருந்த குன்று வெறும் பாறை. யாரோ அதை வெட்டிச் செதுக்கி சமதளமாகத் திருத்தி இருக்கிறார்கள். கோவிலும் அந்தக் குன்றின் ஒரு பகுதி. குடைவரைக் கோவில் என்று சொல்லுகிறார்களே அந்த ரகம். ஆனால் அதன் அமைப்பு வேறு. குன்றின் உச்சியைக் கோவிலாகச் செதுக்கி அதனோடு ஒட்டி பிரகாரமாக தளத்தையும் செப்பனிட்டிருக்கிறார்கள். கோவில் எல்லாம் பிரமாதமான உயரமல்ல. சுமார் நாற்பது அல்லது ஐம்பது அடி உயரந்தானிருக்கும். அதற்குக் கோபுரம் ஏதும் கிடையாது. மலையாளத்துக் கோவில்கள் மாதிரித் தானிருந்தது. ஆனால் கருங்கல் வேலைப்பாடு. சுற்றி வந்தேன். கிழக்குப் பக்கத்தில் வாசலிருந்தது; ஆனால் கதவில்லை. கோவிலின் முற்றத்தில் கிழக்குப் பிரகாரம் மூன்று நான்கு அடி அகலத்துக்கு மேல் இல்லை. அந்த பிரமாண்டமான பாறை பிளவுபட்டு, வெறும் பாதாளமாக இருட்டுடன் ஐக்கியமாயிற்று. வெளிப்பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது. கோவில் வாசலில் கால் வைத்தேன். சற்று தயக்கத்துடனேயே உட்புகுந்தேன். இந்த ஒற்றை கல் கோவிலுக்குள்ளும் சிறு பிரகாரம். அதன் மையத்தில் தான் கர்ப்பக்கிரகம். பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. காலில்கூடப் பாசியும் நுரையும் மிதிபட்டது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி ஒரு பிரதட்சணம் வந்துவிட்டு, அதன் வாசல் பக்கம் நின்றேன். வாசலில் இரண்டு பக்கத்திலும் இரு அபூர்வமான மிருகங்களை துவாரபாலகர்கள் போல் கல்லில் செதுக்கியிருப்பது சற்று மங்கலாகத் தெரிந்தது. கர்ப்பக்கிரகத்தில் என்ன இவ்வளவு இருட்டு என்று எண்ணமிட்டுக்கொண்டே கைகளை முன்னோக்கி நீட்டிக்கொண்டு கருங்கல் நிலையில் கால் வைத்தேன்.

நிலைப்படியில் தாமரைப்பூ செதுக்கியிருப்பது காலுக்குத் தட்டுப்பட்டது. முன் நீட்டிய கைகளை வழவழப்பான இருள் வழிமறித்தது. வழி கிடையாதா அல்லது கல்லால் செதுக்கிய கதவா என்று எண்ணமிட்டுக்கொண்டு தடவிப் பார்த்தேன். கரும் பளிங்குபோல வழவழப்பாக இருந்தது. கால் பாதத்தில் தட்டுப்படும் தாமரை உறுத்தியதினால் சற்று பாதத்தை உயர்த்திவிட்டு மறுபடியும் காலைக் கீழே வைத்தேன். குமிழ் போல ஏதோ தட்டுப்பட்டது. தாமரையின் மையம் என்று நினைத்தேன். அதே சமயத்தில் கருப்புப் பளிங்குக் கதவு உட்பக்கமாகத் திறந்தது. நான் கதவின் மீது கைகளை ஊன்றிக்

630

கபாடபுரம்