பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இம்மாதிரிக் காற்று அடித்தால் சூர்யோதயமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும்போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது அந்தத் தலை.

இது என்னடா புதுவிதமான கடிகாரமாகத் தோன்றுகிறதே என்று எண்ணமிட்டுக்கொண்டு "நீ யார்? எப்படி சிரசை மட்டும் காப்பாற்றி உயிருடன் இருந்து வருகிறாய்?" எனக் கேட்கலாமா என்று வாயெடுத்தேன்.

அந்த சிரசு கண்களை மூடியபடியே நான் சொல்ல வந்ததை எதிர்பார்த்தது போல, வாயைத் திறவாமலேயே பேசியது.

"நானும் ஒரு காலத்தில் உன்னைப் போல உடம்புடன் தானிருந்தேன். உலக பந்தங்களுக்கு உடன்பட்டு பிறப்புச் சங்கிலிக்குள் தன்னையும் உட்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்குத்தான் உடம்பு அவசியம். காலத்தை எதிர்த்து நிற்க விரும்புகிறவர்களுக்கு உடம்பு அனாவசியம். மேலும் பால பேதத்தினால் உடலில் தோன்றும் இச்சா பந்தங்களையும் போக்கிக் கொள்ளலாம் அல்லவா? என்னுடைய வயசு என்னவென்று நினைக்கிறாய்? மூன்று கல்ப காலம் கடந்துவிட்டது; நான் எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும். என்னுடைய இச்சை என்று அவிந்ததோ அன்று நான் காற்றுடன் காற்றாகக் கரைந்துவிடுவேன்..."

அந்த சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.

"உடல் இழந்த வாழ்வு எனக்கு எப்படி ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பாதே. அந்த ரகசியம் உனக்குக் கிடைக்காது. அது குமரிமலையுடனும் பரளியாற்றுடனும் பரம ரகசியமாக ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. கேவலம் நீ ஒரு மனிதன். மிஞ்சிப்போனால் இன்னும் இருபது வருஷங்கள் உயிரோடு இருப்பாய். அதாவது இந்த உடம்போடு உறவு வைத்திருப்பாய். உனக்கு எதற்கு இந்த ரகசியங்கள்?" என்று கேட்டது.

"அழியும் உடம்பு என்பதை உன்னுடைய முன்னோர்களும் அறிந்துதானிருந்தார்கள். இருந்தாலும் கர்ப்ப கோடி காலம் பிரக்ஞை மாறாமல் வாழ்வதற்கு ஒரு வழி உண்டு என்பதைக் கண்டுபிடிக்காமல் ரொம்ப நாட்களைக் கழித்தார்களா? அப்படி அவர்கள் கழித்திருந்தால் இப்போது என்னுடன் பேச உனக்கு முடியுமா?" என்று கேட்டேன்.

தலை கடகடவென்று சிரித்தது. "உனக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளப் போதுமான தைரியம் உண்டா? நான் யார் என்பதைத் தானே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாய். கர்ப்ப கோடி காலத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன். நான் வாழ்ந்த உலகம் எப்படி இருந்தது. என்பதை நான் உனக்கு காட்டுகிறேன். மணிவிளக்கு நிற்கிறதே, அந்த மாடத்தின் அருகில் யாளியின் தலை ஒன்று செதுக்கியிருக்கிறது. தெரிகிறதா? அந்தத் தலையை வலப்புறமாகத் திருப்பு."

632

கபாடபுரம்