பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ணும்!" என்று ஏங்கினாள். அந்தக் கரிய உருவம் தான் போகும் திசையில் இருளில் மறைவதைக் கண்டவுடன், அதுவும் தன்னைப் போன்ற பாதசாரியாக இருக்கலாம் என்று நினைத்தாள். மூங்கிலடியான் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, "அதாரது! ஐயா! ஐயா!" என்று கூவிக்கொண்டே நடக்கலானாள்.

"யாரங்கே கூப்பாடு போடுவது?" என்ற கனத்த ஆண் குரல் இருளோடு வந்தது.

"சித்தெ பொறுத்துக்கும், இதோ வந்தேன்!" என்று நெருங்கினாள்.

தலையில் பெருத்த முண்டாசு, நீண்ட கிருதா, வரிந்து கட்டின அரைவேஷ்டி, திடகாத்திரமான சரீரம், அக்குளில் ஒரு குறுந்தடி - இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவாரம்பித்தன. சரீர ஆகிருதியைப் பார்த்ததும் கிழவிக்குப் பெரிய ஆறுதல் - இனிக் கவலையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையினால்.

"ஏ கெழவி! இந்தக் கும்மிருட்டிலே நீ எங்கே கெடந்து வாரே?" என்றான் அந்த அந்நியன்.

"நான் இங்கனெ இருந்துதான். எம்பிட்டுப் பறந்து பறந்து வந்தாலும் கெழவிதானே! பொளுது சாஞ்சு எத்தினி நாளியிருக்கும்? நான் போயித்தானே கொறெ வேலேயும் முடியணும், நாழி ரொம்ப ஆயிருக்குமா?" என்று கேட்டுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

"பொழுதா? நேரம் ஒண்ணுமாகல்லே! நீ எங்கே போரே?" என்றான் துணைக்கு நடந்த பாதசாரி.

"நான் எங்கே போனா என்ன? ஒங்க பச்சேரிலெ ஒரு பள்ளனெ பாக்கணும், அதுதான்!"

"நீ என்ன சாதி?"

"நாங்க வெள்ளாம் புள்ளெக (வேளாளர்கள்)! நீ யாரு?"

"நான் தேவமாரு!"

"தேவமாரா! என்ன அய்யா, இப்படியும் உண்டா? உம்ம சாதிக்காரன் ஊரெல்லாம் இப்பிடி கொள்ளெ போடுரப்ப, நீங்க பெரிய மனிசரெல்லாம் சும்மா இருக்கலாமா? அந்த அநியாயத்தெ நீங்க பார்த்துச் சும்மா இருக்கலாமா? கலிகாலமா?" என்றாள்.

"கெழவிக்கு வாய்த்துடுக்கெப் பாரு!" என்று கோபித்தவன், கலகலவென்று சிரித்துவிட்டு, பிறகு, "அது கொலைத் தொழிலுதானே! ஆமாம், நீ சொல்லுவது போலே கலிதான். நீ என்னமோ தெரியாம பேசுறயே. அவன் வேறே கிளை, நான் வேறே. அந்தப் பய கொண்டையங் கோட்டையான். நான் வீரம் முடிதாங்கி... ஆமாங் கெழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிறெ?" என்று கேலியாகக் கேட்டான் அந்தத் தேவன்.

"ஆமாம்! எங்கிட்டெ லெச்ச லெச்சமா இருக்கு, நான் பதரறேன்!" என்று ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.


64

புதுமைப்பித்தன் கதைகள்