வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொள்ளாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரனாகக் கிடந்து வெம்பியது. குதிரை எனக்காட்டி ஏமாற்றி வந்துவிட்ட செயலுக்காக தானும் அந்த மனிதனைப் போல சிட்சை பெற்றால்தான் ஆறும்; வாதவூரன் தன் அருகில் வந்தால், அவனருகில் தான் இருக்க லாயக்கு என்று நினைத்தாள்.
வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஓர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறிய முடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம். ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்மாளி போட்டுக்கொண்டிருந்தான்.
அங்கயற்கண்ணி சிரித்தாள். வெள்ளம் இன்னும் உக்கிரமாக நுரை கக்கிப் பாய்ந்தது.
மனித வம்சம் துயரத்திலும் வேதனையிலுமே ஒன்றுபட்டு வரும். தன்னை அறியாமலே முக்திநிலை எய்தும். அன்றிரவு அவ்வூரின் நிலை அது. யானையும் காளையும் மனிதனும் மதிலும் மண்ணும் அரசனும் ஆண்டியும் அன்று வெள்ளத்தைத் தடுக்க, மறிக்க, தேக்கி நகரத்தைக் காப்பாற்ற, காரிருட்டில் அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் மண்வெட்டிப் போட்டுப் போட்டு நிரப்பினர். மண் கரைந்தது. மறுபடியும் போட்டனர். கரைந்தது. மறுபடியும் போட்டனர்.
அன்றிரவு இரண்டு ஜீவன்கள் வெவ்வேறான துயரத்தில் வாடின. வாதவூரன் தன் பொய்யை நிலைநாட்டிய தெய்வத்தின் கருணையைச் சுமக்க முடியாமல் வேதனைப்பட்டான். மண் வெட்டி வெட்டிப் போடும் அனந்தகோடி ஜனங்கள் முயற்சியை அவனது வேதனை கரைத்தது. உழைத்து உழைத்துச் சோர்வடைகிறவர்களுக்குப் பசியாற்ற ஒரு கிழவி, பந்தமற்ற நாதியற்ற கிழவி பிட்டு அவித்து அவித்துக் கொட்டி விற்று வருகிறாள். அவள் கிழவி. அவளுக்கு நாதி இல்லை. பந்தம் இல்லை. பிட்டும் பிட்டுக் குழலுந்தான் பந்தம். தணிக்கை பண்ணிவரும் கணக்கர்கள் பசி போக்கப் பிட்டுக்காரியிடம் வந்தார்கள். அவளது அடுப்பில் எரிந்த நெருப்பில் கொஞ்சம் எடுத்து அவளது வயிற்றில் கொட்டிவிட்டுப் போனார்கள். மதுரைவாசிகள் எல்லாரும் கரைக்கு மண் போடவேணுமாம். அவளது பங்குக்கும் தச்சிமுழம் நாலு அளந்து போட்டிருக்கிறதாம். அவள் என்ன செய்வாள்? பிட்டுக் குழலைப் பார்ப்பாளா? அடுப்பைப் பார்ப்பாளா? அந்த இருட்டில் ஆள் தேடிப் போவாளா?
இருட்டிலே "ஆச்சீ" என்ற குரல் கேட்டது. அதிலே எக்களிப்பும் பரிவும் கலந்திருந்தன. வேதனை வெள்ளத்தில் முக்குளித்த ஈசன் குரல் அல்லவா?
656
அன்று இரவு