பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அடித்ததற்குப் பலன் அரியணைக்குப் பதில் அரன்மடி போலும்" என்றாள் அன்னை.

அவர்களது மடிமீது அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருந்தான்; சிசுவைப் போல, கவலை இல்லை; எதுவும் இல்லை.

"வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான்" என்றான் ஈசன்.

பொற் பிரம்பு

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வானத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின்மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடி விழுந்தது.

காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது.

அங்கயற்கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது.

கலைமகள், ஜனவரி, பிப்ரவரி 1946

புதுமைப்பித்தன் கதைகள்

661