பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லாபம் என்ன? நான் என்பது இனிமேல் இந்த நானாகவே இருக்குமா? ...அதோ என்ன சப்தம், மெதுவாக எங்கோ ஊதுகுழல் மாதிரி தூரத்திலிருந்து வருவதால் காதில் இனிமையாக நுழைகிறதே! திடுக்கிட்டு உட்காருகிறேன். வேறொன்றுமல்ல, யாரோ ரசித்து அனுபவித்து ராக ஆலாபனத்துடன் கொட்டாவி விடுகிறானா? இல்லவே இல்லை.

படபடவென்று எழுந்து மொட்டை மாடிக்கு வந்தேன். வானத்தில் நட்சத்திரங்கள் வழக்கம் போல மினுக்கிக் கொண்டிருந்தன. ஆனால் என் சரகத்துக்கு அருகாமையில் உள்ள சங்கு அலமறுகிறது, உலகத்தின் விதியை நினைத்து அங்கலாய்த்துப் பிரலாபிப்பது போலிருந்தது அது அபாயத்தின் நெருக்கத்தை அறிவிக்கவில்லை. சமுதாயத்தின் வலுவை பிரலாபத்துடன் படபடப்போடு எழுப்புவது போல இருக்கிறது. நகரத்தின் மீது கவிந்து அமுக்கிக் கொண்டிருக்கும் படபடப்பு என்ற அரக்கன் தன் முழு சக்தியையும் நகரத்தின் மீது உபயோகிப்பதற்காக முக்கி முனங்கி உறுமித் திணறுவது போலிருக்கிறது.

என்னவானால் என்ன? அது அர்த்த ஜாமத்தில் எழுப்பி விட்டது. விடிவதற்கு எவ்வளவு நேரம் என்று பார்க்க உள்ளே வந்து கெடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அதற்கு ரேடியம் டயல். அது கொள்ளிக் கண் தீயுமிழ, ஏற்கனவே விடிந்துவிட்டது என உறுமியது. விடிந்துவிட்டது என்பதில் ஆசுவாசம்; நிம்மதி; அலமறலும் அடங்கியது. அப்புறம் ஒரு அமைதி... பிரலாபத்தின் விபரீத நாதத்தைவிட பயங்கரமாக இருந்தது அந்த அமைதி. மனசு நிதானப்படுவதற்காக வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு வெளிச்சம் போடாமல் உட்கார்ந்திருந்தேன். விரல்கள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை கிழித்து சீவல் பாக்கைக் கிரமப்படி தேடிக் கொண்டிருந்தாலும் காது விமானத்தின் ரீங்காரம் கேட்கிறதா என்று துழாவியது. வெற்றிலையும் புகையிலும் வாயில் அடக்கிக் கொண்ட பிற்பாடு மனசோட்டம் நிற்கவில்லை.

'நான் பார்த்தேன்' என்றது குரல்.

'அதற்குப் பிறகுதான் சங்கு ஊதினான்' என்று குறைப்பட்டுக் கொண்டது மற்றொரு குரல்.

'விமானமாவது கத்திரிக்காயாவது... நான் ஒன்றும் பார்க்கவில்லை, ஒரு நாழியாக வாசலில் வந்து நிற்கிறேன்' என்றது வேறு ஒரு குரல்.

'அப்படியானால் நம்ம பயணம் நாளைக்கு' என்றது மற்றொரு குரல்.

'விடியட்டும் மகளே...' என்று கேலி செய்தது முன் கேட்ட மற்றொரு குரல்...

வார்டன்களுடைய பிகில் சப்தம். இடைவிட்டு இடைகேட்டு இவர்களது வாதத்தில் தலையிட்டுத் தடுத்தது...யார் தடுத்தால் என்ன? ரசிப்பு அற்ற படபடப்பு துடிக்கும் கைத்த குரல்கள் தான்

புதுமைப்பித்தன் கதைகள்

665