கிழமைக்கும் வாரத்துக்கும் மாதத்துக்கும் ஓடும் வேகந்தான் என்ன. கஷ்டம் - வருத்தம் - கசப்பு - ஏமாற்றம் கடன் வாங்கி அதற்குள் ஐந்து வருஷங்களா?... என்ன ஓட்டமாக ஓடுகிறது. மணல் கூண்டு கடிகையில் கடைசி மணல் பொதி விரைந்து ஓடி வருவது மாதிரி என்ன வேகம்... நிஜமாக, திங்களும் செவ்வாய்களும் இப்போதுதான் இவ்வளவு வேகமாக ஓடுகின்றனவா... அல்லது நான் தான் ஓடுகிறேனா... நான் யார்... இந்த உடம்பா... தூங்கும்பொழுது, பிறக்கு முன் இந்த நான் எங்கிருந்தது... இந்த நான் தான் ஓடுகிறதா, நாள் தான் ஓடுகிறதா... பெட்டியடிக் கணக்கு... இடுப்பொடிக்கும் உழைப்பு, குனிந்து குனிந்து, இன்னொருவன் பணமூட்டைக்கு தலையை அண்டை கொடுத்து கழுத்தே சுளுக்கிக் கொண்டதே. முதுகிலே கூன் விழுந்துவிட்டது. பிறனுக்கு நலம் பார்த்து நாலு காசு சேர்த்து வைத்துக் கண்ணிலும் வெள்ளெழுத்து. வீட்டிலே பூனை படுத்திருக்கும்... பொய்மை நடமாடும்... வறுமையும் ஆங்கே பெற்றெடுத்த பிள்ளையுடன் வட்டமிட்டுக் கைகோர்த்து விளையாடும். மனையாளுக்கு கண்ணிலே இருந்த அழகு - ஆளைத் தூண்டிலிட்டு இழுக்கும் அழகு எங்கே போயிற்று? கையில் ஏன் இந்த வறட்சி? வயலோ ஒத்தி. வீடோ படிப்படியாக மூலப் பிரகிருதியோடு லயமாகிவிட யோக சாதனம் செய்கிறது. விட்டமற்றுப் போனால் வீடும் வெளியாகும்... அப்பொழுது அழகியநம்பியா பிள்ளை எங்கே, அவர் மகன் பரமசிவம் எங்கே... எல்லாம் பரம ஒடுக்கத்திலே மறைந்து விடும். எத்தனை துன்பம் - எத்தனை நம்பிக்கைக்காக எத்தனை ஏமாற்று... எத்தனை கடவுள்கள்... வாய்க்கு ருசி கொடுக்க ஒரு கடவுள்... வயலுக்கு நீர் பாய்ச்ச ஒரு கடவுள்... வியாச்சியம் ஜயிக்க... சோசியம் பலிக்க, அப்புறம் நீடித்து, நிசமாக உண்மையில் பக்தியாய்க் கும்பிட. எத்தனையடா எத்தனை... நான் தோன்றிய பின் எனக்கு என்று எத்தனை கடவுள்கள் தோன்றினார்கள்... எனக்கே இத்தனை என்றால் என்னைப் போன்ற அனந்த கோடி உயிர் - உடம்புகள் கொண்ட ஜீவநதியில் எத்தனை... ஆற்று மணலைக் கூட எண்ணி விடலாம்... இந்தக் கடவுளர்களை? ஒருவன் பிறந்தால் அவனுடன் எத்தனைக் கடவுளர்கள் பிறக்கிறார்கள். அவனுடன் அவர்கள் மடிந்து விடுகிறார்களா... 'நான்' மடிந்து விடுகிறதா... அப்பொழுது ஒருவேளை அவர்களும் இந்த நானோடு போய் விடக்கூடும்... இந்த நானையும் மீறித் தங்கிவிடுகிற கடவுளர்களும் உண்டு. அவர்கள் தான் மனம் என்ற ஒன்று கால வெள்ளத்துக்கு அருகே அண்டி விளையாடும் மணல் வீட்டைப் பந்தப்படுத்த முயலும் சல்லி வேர்கள் - பரமசிவம், பரமசிவம் உனக்கு ஏதுக்கடா இந்தச் சள்ளை! அதோ, காலடியில் பாம்புடா, பாம்பு...
கயிற்றரவு!
3
காலம் ஒரு கயிற்றரவு?
678
கயிற்றரவு