பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/694

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்றன்னை


'மார்க்' பார்க்க வந்த மன்மதன்!

சுந்தரவடிவேலு சர்வகலாசாலை பி. ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பிரதம பரீட்சகர். அவருக்குக் கீழ் பல உதவிப் பரிசோதகர்கள் உண்டு. மாணவர்கள் எழுதிய பதில்களைத் திருத்தி மார்க்கிட்டுப் பட்டியல் அனுப்புவதை எல்லாம் சரிபார்த்து பரீட்சை போர்டுக்குச் சமர்ப்பிக்கும் பொறுப்புடன், சில பதில்களைத் தாமே திருத்தி நிர்ணயிக்கும் பொறுப்பையும் இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

தன் மகன் ராஜாவைப் பறிகொடுத்து உன்மத்தனாகி மனம் ஸ்தம்பித்துப் போய், சொல்ல முடியாத மன உளைச்சல் என்ற சிலுவையை ஏற்ற பிறகு இந்த வருமானமுள்ள வேலை வேப்பங் காயாகவே இருந்தது; என்றாலும் பொறுபபை ஏற்றுக்கொண்டு கடைசி நேரத்தில் உதறித் தள்ளுவதற்கு சர்வகலாசாலையில் மாற்றுக் கைகள் தயாராக வைத்துக்கொண்டிருக்கிறார்களா?

அதனால் அசுரகதியில் வேலையில் ஈடுபடுகிறார். இந்த வேலை அவருடைய மன வேதனைக்கு 'ஒத்தடம்' கொடுத்தது.

சுந்தரவடிவேலு குஞ்சுவையும் மறந்தார் என்று சொல்லும்படி தம்முடைய வாசிக்கும் அறையிலேயே அடைந்துகிடந்து வேலை பார்க்கிறார். என்ஜினுக்குத் தண்ணீர் ஊற்றுவதுபோல் குஞ்சுவோ மரகதமோ காப்பி கொண்டு போவார்கள்.

"அப்பா காப்பி" என்ற குழந்தையின் மழலை மந்திரம் அவருடைய கைகளை நீட்டச் செய்யும். சமயா சமயங்களில் அவளை இழுத்து முத்தமிடச் சொல்லும்.

மரகதம் அவருடைய வேலைக்குக் குந்தகம் வராமலும், வேலையால் அவரது உடல் க்ஷீணிக்காமலும் அவர் அறியாமலே அவரைப் போஷித்துப் பணிவிடை செய்தாள். பணிவிடையில் மனம் சிறிது ஆறுதல் கொண்டது. பணிவிடையில் குஞ்சுவும் மரகதமும் ஒன்றினர்.

புதுமைப்பித்தன் கதைகள்

693