பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்படியாகக் கிட்டு... சரசரவென்று வெளிக்கேட்டைத் தாண்டிக் கொண்டு உள்ளே பிரவேசிக்கிறான்.

மரகதமும் வியவகார அறிவு ஜாஸ்தியாக இருந்தாலும் குழந்தைதான். படம் பார்ப்பதில் ரொம்ப பிரியம்.

குஞ்சுவுக்கென்று சுந்தரவடிவேலு வாங்கிக் குவித்த படப் புஸ்தகங்களை எல்லாம் யாரும் இல்லாத சமயத்தில் தனியாக இருந்துகொண்டு ரசிப்பாள்.

குழந்தை வெளியே விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்களோ வெளியே போயிருக்கிறார்கள் என்று நடு ஹாலில் நாற்காலியில்கூட உட்காராமல் தரையில் குப்புறப் படுத்தவண்ணம் மிருகங்கள், பட்சி ஜாதிகள் முதலியவை உள்ள படப் புஸ்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். உடை குலைந்து முன்தானை சற்று விலகிக் கிடக்கிறது.

வேலைக்காரன் வந்து சொல்லிவிட்டுப் போகுமுன் வழியில் வந்து படுத்துக் கிடந்தால் நிச்சயம் 'காதல்'தான் என்று காகதாளிக நியாயமாக நிச்சயப்படுத்திக்கொள்கிறார் ஸ்ரீமான் மாணவர்! சிறிது நேரம் ஜன்னல் அருகிலேயே நின்றுகொண்டிருக்கிறான் மாணவன், அழைப்பு வரும் என்று. பாவம் அப்படி ஒன்றும் வரவில்லை.

மரகதத்தைக் கவர்ச்சித்த படம் பஞ்சவர்ணக்கிளி. முட்டையுடன் கூடிய கூண்டு. பட்சி பறந்துவந்து கூண்டருகில் உட்காரும் பாவனையில் இருக்கிறது. தாய் வீட்டில் இருக்கும்பொழுதே அவளுக்கு கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் பிறந்த வீட்டில் அதற்கு இருந்த நிரந்தரத் தடை புருஷனிடமும் அதைச் சொல்ல மனத் தெம்பு கொடுக்கவில்லை.

அதற்கு அப்புறம் அடுத்த படத்தைத் திருப்புகிறாள்.

பையன் கதவைத் திறக்கிறான்.

அடுத்த படம் குரங்குப் படம். ஊராங் - ஊடாங் ஜாதி. பெரிசும் சிறிசுமாகக் கிளையில் உட்கார்ந்திருக்கின்றன. அதன் கிழடு தட்டிய முகத்தைக் கண்டால் அவளுக்கு எப்பொழுதும் சிரிப்பு வரும். ஆகையினால் 'களுக்' என்ற சிரிப்பு அத்துடன் நின்றது ......

பையனுக்கு 'லவ்வே' அன்று ஊர்ஜிதமாகிவிட்டது.

அவள் நிறுத்திய காரணம் சோக அலைகளே.

ராஜா இருக்கும்போது, ராஜாவும் குஞ்சுவும் அதைப் பார்த்து ரசிப்பதும் சிரிப்பதும், "உன்னைப்போல் இருக்குடா?” என்று குஞ்சு சொல்வதும், அவன் அதற்கப்புறம் அவளைப் போலத்தான் இருக்கு என அழுத்திக் கத்துவதும், அப்பாவின் தீர்ப்புக்குப் போவதும், அப்பா இரண்டு பேரையும் நையாண்டி செய்வதும் எல்லாம் நினைக்கிறாள்.

கண்களிலிருந்து நீர் சொட்டுகிறது. குரங்குப் படத்தை நனைக்கிறது.

தவிக்கும் யுவதிகளை எல்லாம் ஆற்ற வேண்டும் என்று காதல் துறைகள் பறைசாற்றுகின்றனவே.

695

சிற்றன்னை