பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையை அருகில் அணைத்து இறுகப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் உட்காருகிறாள்.

அவள் உடல் நடுங்குகிறது.

"ஏஞ்சித்தி ஆடுறே!" என்று அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது குழந்தை.

"இப்ப கள்ளன் வந்தானே நீ பாக்கலியா?"

"கள்ளன்னா?"

"திருடன்!"

"அப்பிடின்னா?"

"இப்ப சட்டையுங்கிட்டையும் போட்டுக்கிட்டு ஒருத்தன் வரலே?..."

"ஆமாம். இப்பிடி இப்பிடி நடந்து வந்தானே" என பையனுடைய அந்தஸ்து நடையைக் காப்பி அடித்துக் காண்பிக்கிறது.

குழந்தையின் நடையைக் கண்டு சிரித்துக்கொண்டு, "ஆமாண்டி கண்ணு" என முத்தமிடுகிறாள்.

"படம் பார்க்கலாம் வாரியா?" என்கிறாள் மரகதம்.

"ஆகட்டும்." என்கிறது குழந்தை.

குரங்குப் படத்தைக் காட்டிக்கொண்டு "இது யாரு மாதிரி இருக்கு?" என்கிறாள்.

"ஒம்மாதிரித்தான் இருக்குது சித்தி..." எனத் தீர்ப்புக் கூறுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு சிரிக்கிறது குழந்தை.

"உன்னைப் போலத்தான்" என்று முகத்தில் செல்லமாக இடிக்கிறாள் மரகதம்.

குழந்தை 'வவ்வவ்' என வலித்துக் காட்டுகிறது.

'வவ் - வவ்!' என பதிலுக்கு வலித்துக் காட்டுகிறாள் மரகதம்.

'வவ் - வ்வ்' என்கிறது மற்றொரு குரல். இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

ஜன்னலருகில் சுந்தரவடிவேலு.

கதவைத் திறந்தார். "ரிப்பேராப் போச்சு!" என்றபடி உள்ளே நுழைந்து, "ஏதேது, அம்மையும் மகளும் ரொம்ப குழையிற்களே" எனக் குழந்தையைத் தோளில் நிறுத்தி மரகதத்தையும் இழுத்துக்கொண்டு தான் வாசிக்கும் அறைக்குப் போகிறார்.

பூனை வாண்டாம், அப்பா!
பூனை வாண்டாம்!

இப்படியாக ரஜாக் காலமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

அறுவடையாகிவிட்டதால் மறு சாகுபடிக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில், 'குழந்தைகளை' என

698

சிற்றன்னை