பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரகதம் தனக்கு மட்டும் தன் கையால் சமைப்பது, சாப்பிடுவது, உக்கிராணப் பிறையில் தலைவிரி கோலமாக மனநிம்மதி இல்லாமல் படுத்துக் கிடப்பது... மனத்துடன் போராடுவது.

'யார் குற்றம்? குழந்தையின் பிடிவாதத்தைத் தீர்க்க வேண்டாமா, நான் என்ன அடித்தேனா, வைதேனா?... லேசாய் பயங்காட்டினால் என்ன பிரமாதம்!...

இவ்வாறாக மனம் சித்தாந்தம் செய்ய ஆரம்பித்துவிட்டது.

இருவரும் பேசவில்லை.

இந்தப் புதிருக்கு இரு 'குழந்தைகளை'யும் இவ்வாறு பிரிந்து விலகும்படி செய்யாதிருக்க என்ன வழி என்பது அவருக்குப் புரிய வில்லை.

குழந்தைக்கு 'நர்ஸ்' அமர்த்திவிடுவோமா... அல்லது orphanageஇல் சேர்த்துவிடுவோமா என்றெல்லாம் மனம் ஓடியது. புதிருக்கு விடையில்லை.

குழந்தை எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டது. முன்போல ஓடி ஆட ஆரம்பித்துவிட்டது ஆனால் 'மியாவ்' என்ற சப்தம் கேட்டால் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். குழந்தை உறுதிகொண்ட குழந்தை. பயத்தை வெளிக்குக் காட்டுவதில்லை.

இப்பொழுது முன்போல, 'அம்மாகிட்ட சொல்லுவேன்' என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வருவதில்லை.

சுந்தரவடிவேலுக்குக் கலாசாலையும் திறந்துவிட்டது.

அன்று விடியற்காலம் குழந்தை தன் சின்னக் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறது. குலைந்து கிடந்த சிறு பாவாடையை நன்றாகக் கட்டிக்கொள்ளுகிறது.

ஜன்னல் விளிமபில் உள்ள கடுதாசிப் பொட்டலத்திலிருந்து இரண்டு திராட்சைப் பழங்களை எடுத்துக்கொண்டு வருகிறது.

தாயார் படத்தின்முன் நின்று சிறிது நேரம் அதையே கவனிக்கிறது.

அப்புறம் இரண்டு பழங்களையும் படத்திற்கு நேராகத் தரையில் வைக்கிறது. தன் சித்தி குத்துவிளக்கின் முன்பு மண்டியிட்டு, தலை தரையில் படும்படி கும்பிடுவது போலப் படுத்து வணங்குகிறது. யாரையும் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்ளவில்லை.

பிறகு திராட்சைப் பழங்கள் ரண்டையும் எடுத்து வாயில் போட்டுத் தின்றுகொண்டு, தன்னுடைய ஓட்டை எஞ்சின் சகிதம் புழக்கடைப் பக்கம் சென்று பல் விளக்குகிறது. நேராகத் திரும்பிவந்து தெருவாசல் படியில் உடகார்ந்து குனிந்துகொண்டு எஞ்சினைக் கைகளால் உருட்டி உருட்டி விளையாடுகிறது.

சில சமயம் 'குச்குச்' என்ற சப்தம் அதன் வாயிலிருந்து வரும்.

இந்த நிலையில், "குஞ்சு! குஞ்சு! குஞ்சம்மா!" என்ற தகப்பனாரின்

குரல்.


704

சிற்றன்னை