பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்னாப்பா!" என்று நிமிராமலே சத்தம் கொடுக்கிறது குழந்தை.

"உன்னை எங்கெல்லாமடி தேட, என் கண்ணு ! என்ன செய்யறே" என்று கூறிக்கொண்டு வெளியில் வந்து குழந்தையை வாரி அணைத்துக்கொள்ளுகிறார்.

"காப்பி சாப்பிட வேண்டாமா?"

"ஊம்" என நீட்டுகிறது குழந்தை.

மணி பத்து.

கார் வாசலில் நிற்கிறது....

குழந்தை சட்டை போட்டுக்கொண்டு கையில் ரயில் படப் புஸ்தகமும் எஞ்சினுமாக வாசல் படியில் வந்து நிற்கிறது.

தகப்பனார் வெள்ளைக்கார மோஸ்தரில் உடையணிந்துகொண்டு, கையில் ஐந்தாறு கனமான புஸ்தகங்களுடன் வெளியே வருகிறார்.

அப்பாவைக் கண்டதும் குழந்தை தன் கையில் உள்ள ரயில் படப் புஸ்தகத்தையும் எஞ்சினையும் காருக்குள் வைக்க முயல்கிறது.

"எங்கடியம்மா குஞ்சு இந்த அவசரம்?" என்கிறார் சுந்தரவடிவேலு.

"அப்பா! அப்பா,நானும் ஒங்கூட வாறேன் அப்பா" எனக் கெஞ்சுகிறது குழந்தை.

இதுவரை குழந்தையிடம் இந்தக் கெஞ்சல் வியாபாரமே கிடையாது; எல்லாம அதிகாரமயம்தான். அதிசயித்துச் சிரித்துக்கொண்டு, "நான் இண்ணக்கி பள்ளிக்கூடமில்லா போகிறேன். நீ வரலாமா, போய் விளையாடிக்கொண்டிரு, சாயங்காலம் வந்து ஒன்னைப் பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்கிறார்.

"பீச்சுக்கில்லே அப்பா, நான் ஒண்ணுமே செய்யமாட்டேன்; கார்லியே உட்கார்ந்திருப்பேன். ஒண்ணுமே செய்யமாட்டேன்... நானும் வரேன் அப்பா" என்று மறுபடியும் கெஞ்சுகிறது.

குழந்தையின் பிடிவாதத்தையும் கெஞ்சலையும் கண்டு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என ஊகித்து, அவளை வாரி எடுத்து முகத்தைத் தடவிக்கொடுத்து "ஏண்டியம்மா நீ கெட்டிக்காரியில்லியா..." என ஆரம்பிக்கிறார்.

குழந்தை ரகசியமாக காதோடு காதாக, "சித்தி - பூனெ" என்று சொல்லுகிறது.

பிள்ளையின் முகம் மாறுகிறது. சொல்ல முடியாத மனவேதனை. புத்தியில்லாமல் குழந்தையை எப்படிப் பயமூட்டிவிட்டாள்.... பயம் எப்படி வேரூன்றிவிட்டது இதை எப்படி போக்குவது என மனசு நிலைகொள்ளாது தத்தளித்தது.

என்ன செய்யலாம்? குழந்தையை எப்படிப் பள்ளிக்கூடத்திற்கு எடுத்துக்கொண்டு போவது? வேலைக்காரர்களிடம் நிற்காதே! தானே ஓடியாடித் திரிகிற குழந்தைக்கு பயம் பிறந்துவிட்டதே என நினைக்கிறார்.


புதுமைப்பித்தன் கதைகள்

705