பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"கண்ணு நி சும்மா வெளையாடிக்கிட்டிரு. சித்தி ஒண்ணுமே செய்யமாட்டா... பூனெ வரவே வராது.. அண்ணெக்கே அடிச்சு வெரட்டியாச்சே... நான் சீக்கிரமா வந்திடறேன்... அப்பரம் நாம் ரெண்டு பேருமா வெளையாடுவோமாம்... பிஸ்கோத்து தரட்டா?.."

"தா..." என சோர்ந்தாற்போல் நீட்டுகிறது குழந்தை.

"அப்பொ..." என மறுபடியும் ஆரம்பிக்கிறது...

"அப்பொ... என்ன?" என்கிறார் சுந்தரவடிவேலு.

"பாலும் எடுத்து தந்திரேன்..." என்கிறது குழந்தை.

"ஏம்மா..சித்தி தருவாளே..."

"மாட்டேன், நீதான்..." என்கிறது மறுபடியும்.

குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்று ரண்டு பை நிறையவும் பிஸ்கோத்து போட்டுத் தருகிறார். அடுக்களைக்கு அழைத்துக்கொண்டுபோய், பாட்டிலில் பாலை ஊற்றி ரப்பரைப் போட்டு அதன் கையில் கொடுக்கிறார். இருவரும் வெளியே வருகின்றனர்.

"சரிதானா?" என்று சொல்லிக் கீழே இறக்கிவிடுகிறார்.

"சரிதான்..." என நீட்டுகிறது குழந்தை.

ஸ்ரீமான் சுந்தரவடிவேலு காரில் உட்கார்ந்துகொண்டு வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார்.

"அப்பா அப்பா!" என்கிறது குழந்தை.

"இப்பொ என்ன?" என்கிறார்.

"எம் பொஸ்தகத்தையும் எஞ்சீனையும் குடு" என்கிறது குழந்தை.

"ஓஹோ!" என்றுகொண்டு எடுத்துக்கொடுக்கிறார்.

"நான் புறப்படட்டா?" என்றுகொண்டு வண்டியை ஓட்டுகிறார்.

"உம்" என்றுகொண்டு நீட்டுகிறது.

வண்டி புறப்பட்டுப் போகிறது. அது வெளிகேட் வரை சென்று திரும்பும்வரை அதையே பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை.

பிறகு மெதுவாக அக்குளில் புஸ்தகத்தை இடுக்கிக்கொள்ளுகிறது. ஒரு கையில் என்ஜின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இழுக்கிறது. மற்றொரு கையில் பாட்டில் இந்த சன்னத்தங்களுடன் குழந்தை வெளியே புறப்படுகிறது... மெதுவாக நடந்துசெல்லுகிறது.... இவ்வளவு கூத்தையும் மரகதம் ஒரு ஜன்னலில் நின்று பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண் கலங்குகிறது. வாயில் சிரிப்பு வருகிறது... குழந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்...

குழந்தை வெளிகேட்டு அருகில் நிற்கும் வாதமுடக்கி மர நிழலுக்குப் போகிறது. பாட்டிலை வாசல்கேட் காறைக்கு அருகில் உள்ள குத்துக்கல்மீது வைக்கிறது. நிழலில் வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பொம்மை பார்க்கிறது ... அது அவ்வளவாக ரசிக்கவில்லை.

706

சிற்றன்னை