பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொன்னா - அவென் வந்ததும், அப்பா வந்தாங்க கோவிச்சுக்கிட்டாங்க. அவுங்க போனம்பரவு, எப்பவோ செத்துப்போயிட்டான், நானுங்கூடவேதான் இருந்தேன்" என்று உணர்ச்சியுடன் சொல்கிறது.

நாடோடிக்கு அவன் ஓரளவு ஊகித்தது சரியாகிவிட்டது என்ற நினைப்புடன், சுந்தரவடிவேலுவைப் பற்றி வெகுவாகத் தப்பபிப்பிராயம் கொண்டுவிட்டான்.

"நீ என்கூட வந்துடிறியா?" என்று கேட்டுவிட்டான்.

"நான் வந்தா யாரு அவுங்க கூட வெளையாடுறது?" என சாவதானமாகப் பதில் கொடுக்கிறது குழந்தை.

அதன் வாயைக் கிண்டிவிட்டுப் பார்க்கும் தன் அசட்டுத் தனத்தையே நொந்துகொண்டு பராக்காகக் குழந்தையின் நினைப்பை வேறுபுறம் திருப்ப, "அதென்னம்மா புஸ்தகம்" என்கிறான்.

"அதா, ரயில் புஸ்தகம்" என்று அதை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறது.

"படம் பாப்பமா?" என்று புஸ்தகத்தை விரித்துப் போடுகிறது.

"உனக்குப் படிக்கத் தெரியுமாம்மா?" என நாடோடி கேட்கிறான்.

"ஒனக்குத் தெரியுமா" என குழந்தை திருப்பிக் கேட்கிறது.

"தெரியாதே..." என்கிறான்.

"எனக்கும் தெரியாது" என்றுகொண்டு படத்தைப் புரட்டிக் கொண்டே பையிலிருந்து பிஸ்கட்களை எடுக்கிறது. தான் ஒன்றை வாயில் போட்டுக்கொண்டு மற்றொன்றை நாடோடியிடம் கொடுக்கிறது. "எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு" என்று சொல்லியும் கேட்காமல், எழுந்து நின்று அவன் வாயில் திணிக்க முயலுகிறது.

அவன் அதை வாங்கிக்கொண்டு, "பாப்பா நான் ஒரு வித்தை செய்கிறேன் பாக்கிறியா" என்று கையில் உள்ள பிஸ்கட்டைக் காண்பித்துவிட்டு, "சூ! மந்திரக்காளி" என்று கையைத் தட்டிவிட்டுக் காண்பிக்கிறான். பிஸ்கட்டைக் காணவில்லை.

குழந்தைக்கு ஆச்சரியம் சகிக்க முடியவில்லை.

"எப்பிடி' எப்பிடி - இன்னொரு தரம் காட்டு" என்கிறது.

"இதோ பாரு, இப்பொ எந்தக் கையிலிருக்கிறது காட்டு!" என்கிறான்.

குழந்தை முதலில் ஒரு கையை விரித்துப் பார்க்கிறது. பிறகு மறு கையை விரித்துப் பார்க்கிறது. இரண்டிலும் இல்லை.

"தின்னுப்புட்டியா?" எனக் கேட்கிறது.

"வரச்சொல்லட்டா" எனக் கையை மூடித் திறந்து காட்டுகிறான்.

பிஸ்கோத்து உட்கார்ந்திருக்கிறது!

"அது எப்படி?"

"மந்திரம்!"


புதுமைப்பித்தன் கதைகள்

711