பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"நான் செய்யட்டுமா?"

"ஊம்."

"நீ கொஞ்சம் கண்ணெ மூடிக்கோ."

நாடோடி சரியென்று கண்ணை மூடிக்கொள்கிறான்.

"நல்லா மூடிக்கணும்" என்று சொல்லிக்கொண்டே ஒரு பிஸ்கட்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு "உம்" என்கிறது.

அவன் கண்களைத் திறக்கிறான்.

குழந்தை இரு கைகளையும் மூடிக்கொண்டு நீட்டுகிறது. அவன் ஒவ்வொன்றாக விரித்துப் பார்த்துவிட்டு, "வரச்சொல்லு பார்க்கலாம்" என்கிறான். குழந்தை அவசர அவசரமாக வாயிலிருந்ததைக் கையில் போட்டு துடைத்துவிட்டுக் காட்டிச் சிரிக்கிறது.

"அப்படியில்லேம்மா?” என்று அவளுக்கு விரல்களுக்கிடையில் பிஸ்கட்டை மறைத்து மறுபடியும் கொண்டுவரும் சாகசத்தைக் கற்பித்துக்கொடுக்கிறான்.

இப்படியே விளையாடிக்கொண்டிருந்தவன், பற்றற்று இருப்பதற்காக ஓடிவந்த தன்னைப் பாசம் மீண்டும் தன்னை அறியாமலே பிணிப்பதைக் கண்டு திடுக்கிட்டு உணர்ந்துகொண்டவன்போல காரணமற்ற சிறிது கடுகடுப்போடு குழந்தையின் நெற்றியில் திருநீற்றை அள்ளி அப்பிவிட்டுத் திருவோடு மூட்டையுடன் வெளியே விரைந்து விடுகிறான்.

விபூதிப் பொடி கண்ணில் விழும் என்று கண்ணை மூடிக் கொண்டு, சாம்பல் பொடி வாயில் கிடைக்கும் என வாயைத் திறந்து ஒன்றும் கிடைக்காததால் ஏமாந்த குழந்தை கண்களைத் திறந்து கொண்டு அவன் போகும் திசையைப் பார்த்து 'வவ் வவ்' என வலித்துக் காட்டுகிறது.

பிறகு தன் 'மூட்டைகள்' எல்லாவற்றையும் சுருட்டி வாரிக் கட்டிக்கொண்டு வெளிக்கேட்டுக்கருகில் உட்கார்ந்து, கைப்பிடிச் சுவரில் சாய்கிறது. தகப்பனார் வரும் திசையை நோக்கியபடியே தூங்கிவிடுகிறது.

மணி நான்கு இருக்கும்.

சுந்தரவடிவேலு காரில் திரும்பி வருகிறார். மனசு நிலைகொள்ளாதிருக்கிறது. குழந்தையின் நினைவு பகல் முழுவதும் மனதை வாட்டியது, அவரது முகத்தில் பிரதிபலிக்கிறது.

தூரத்திலிருந்தே குழந்தை வாசலில் சாய்ந்திருப்பதைக் கண்டு, காரைத் துரிதப்படுத்துகிறார். அருகே வரவரக் குழந்தை தூங்குவது தெரிகிறது. தானும் சிறு குழந்தை மாதிரி மரகதத்திடம் நடந்து கொண்டதின் விளைவே இம்மாதிரி வீட்டில் பிளவு ஏற்படவும், குழந்தைக்கு இந்தத் தனிமை லபிக்கவும் காரணம் என அவர் தீர்மானித்து, அதை உடனே நிவர்த்திக்க வேண்டும் என நினைக்கிறார்.

712

சிற்றன்னை