பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மரகதம், நீ போய் முருகனைப் பாத்து மாமாவுக்கு வென்னிப் போடப் பாரு; சீக்கிரம் - அவுசரமா ரயில்லே ஏறி உக்காந்தாங்கண்ணா பல்லுலே தண்ணி பட்டிருக்காது என்று அர்த்தம்" என்கிறார் சுந்தரவடிவேலு.

"நாந்தான். ஏ முருவா தாத்தாவுக்கு வென்னிப்போடு!" என்று கீச்சிட்டுக்கொண்டு உள்ளே ஓடுகிறது குழந்தை.

"ஏட்டி பைய, பைய எதமாப்போ!" என்று எச்சரிக்கிறார் பாட்டனார். குழந்தையின் கீச்சுக் குரல் "முருவா முருவா!" என உள்வீட்டில் முழங்குகிறது.

மரகதமும் பின்தொடருகிறாள்.

"ராசாவுக்கு என்ன சீக்கு! அப்பிடித் திடீரென்று..." என்கிறார் மாமனார்.

"எம் முட்டாத்தனம்: அவன் எண்ணெக்கிமே பெலகீனம்: நான் வெளிலே போனாப்போ மழையிலே சுத்தியிருக்காப் போலிருக்கு ; திடீருன்னு ஜன்னியும் வலிப்பும் கண்டுது... அவனுக்கு அடிக்கடி ஒரு வலிப்பு வந்துகொண்டிருந்தது..." என்கிறார் சுந்தரவடிவேலு குரல் கம்மலுடன்.

இருவர் கண்களும் கலங்குகின்றன.

"அவ்வளவுதான் நமக்கு அதிஷ்டம். குடுத்து வைக்கலே, வருத்தப்படாதே போ..." என்கிறார் கிழவர்.

இருவரும் மௌனமாக இருக்கின்றனர். சுந்தரவடிவேலு மனம் அவரையே சுடுகிறது.

"நம்மூரிலே ஒரு பிள்ளையார் கோயில் கட்டணும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. வாய்க்கால் பக்கம் இருக்கே முக்கோணமாக ஒரு நெலம், நந்தவனத்துக்குப் பக்கத்திலே, அதே நீ குடுத்தா நல்லாருக்கும்" என்று பேச்சை வேறு திசையில் திருப்புகிறார் கிழவர்

பிராயச்சித்தம் போல இவ்வார்த்தைகள் சுந்தரவடிவேலுக்கு ஒரு மனக்குளுமையை ஏற்படுத்துகிறது.

"அப்படியே செய்துவிடுவோம். அதற்கென்ன" என்கிறார்.

மனக்கண்முன் பிள்ளையார் சிலை ஒன்று பூதாகரமாக ஆனால் மனசுக்குக் குளுமை ஏற்படுத்தும் தன்மையோடு கூடி நிலைக்கிறது...

மறுநாள் விடியற்காலம்....

"தும்பிக்கையொன்றே துணை" என்ற கிழவனார் குரல்....

"தும்பிக்கையொன்றே தொணை" என்கிறது குஞ்சுவின் குரல்.

கி : காட்டு வழியானாலும்...

கு : காட்டு வழியானாலும்...

கி : கள்ளர் பயமானாலும்...


புதுமைப்பித்தன் கதைகள்

715