பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துப்பறியும் வித்தல் ராவிற்கு, ஓர் பயங்கரமான, அபாயகரமான, கொலைப் பைத்தியம் பிடித்த புரட்சிக்காரனுடைய வேலை என்பது உறுதியாயிற்று. ஆனால் யார் என்ற மறுகேள்வி பிறந்தது. காலடித் தடங்கள் தரையில் இருக்கின்றனவா என்று பூமாதேவியை ஏறக்குறைய முத்தமிடும் அளவு முகத்தைக் குனிந்து கூர்ந்து நோக்கினார். ஒரே விதமான காலடித் தடங்கள் முட்புதர் நிறைந்த மைதானத்தை நோக்கி ஓர் ஒற்றையடித் தடத்தின் வழியாகச் செல்வதைக் கண்டார். முதலில் அவற்றை அளந்து கொண்டு வெகு ஜாக்கிரதையாக, 'ஙப்போல் வளை' என்பதற்கு நடமாடும் மனித உதாரணமாகச் சென்றார். உடை முட்புதர்கள் படர்ந்து ஓர் ஆள் உயரம் வளர்ந்திருந்தால் அம்மாதிரி நடப்பதற்கு வித்தல் ராவைப் போல் தொழிலில் பயிற்சி இருந்தால்தான் முடியும்.

இவ்வாறு பதுங்கிப் பதுங்கிச் சென்று ஓர் முட்புதரை நெருங்கினார். அதன் மறுபக்கத்தில் பிரசங்கம் செய்வதுபோல் ஓர் மனிதக் குரல் கேட்க, கிளைகளின் ஊடே முட்கள் கண்களில் குத்தாமல் நோக்கினார். அவரது தீட்சண்ய பார்வையில், பத்துப் பதினைந்து பேர் கூடிய ஒரு சிறு கூட்டத்தின் முன், சிவப்புக் கழுத்துப் பட்டியணிந்த ஒரு வாலிபன் உற்சாகமாகப் பிரசங்கம் செய்வது தெரிந்தது. சிவப்புக் கழுத்துப்பட்டி! சதியாலோசனைக் கூட்டம்! உடனே உடல் முழுவதும் வியர்த்தது. புரட்சிக்காரருக்கும் நமக்கும் 43/4 அடிதான் தூரமிருந்ததென்றால் யாருக்குத்தான் வியர்க்காது!

"இக்கொடுமையை, அநாகரீகமான, மனிதத் தன்மையற்ற கொடுமையை இனி பொறுக்க மாட்டோ ம். நாளைக்குத் தீர்மானமாக..." என்ற பிரசங்கியாரின் வார்த்தைகள், "ஆம்! ஆம்!", "நாளைக்கு", "கட்டாயமாக" என்ற வார்த்தைகளுடன் சபையோரின் கரகோஷத்தினிடையே மறைந்தது. நமது ராவ்ஜியின் மனக்கண்முன், "இரகசியப் போலீஸ் நிபுணர் கொலை" என்ற பத்திரிகைத் தலையங்கங்கள் முதல், உபகாரச் சம்பளம் பெறும் தன் விதவையான மனைவி வரை, சினிமாப் படம்போல் தோன்றி மறையலாயின. ஆனால் அடுத்த நிமிஷம் அவரது அந்தராத்மா அவரது இலக்ஷியமான சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடையுடன் மனக்கண்முன் தோன்றி ஓர் புதிய உற்சாகத்தையும் வீரத்தையும் அளித்தது. அங்கேயே சற்று உட்கார்ந்து கவனிப்பதென்று நிச்சயித்துக் கொண்டார்.

இதற்குள் பிரசங்கமும் முடிந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக, தலைவன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தத்தினால் எழுதாவிட்டாலும் சிவப்பு இங்கினாலாவது இருக்க வேண்டுமென்பது வித்தல்ராவினது திடமான நம்பிக்கை.

இப்பொழுது தலைவனைக் கூர்ந்து கவனிக்க அவகாசமிருந்தது. தனக்கு உளவு கொடுத்த சிறு துண்டு கடுதாசியை அவன் தான் எழுதியிருக்க வேண்டுமென்று பட்டது. பேச்சும் குரலும், ஓர் பயங்கரமான பைத்தியக்கார புரட்சிக்காரனுடையது போலிருந்தது. அவனது


புதுமைப்பித்தன் கதைகள்

71