மாமனார்: "அவள் குளத்தூர் கலியாணத்திற்குப் போயிருக்கிறாள்... நான் உங்களை எல்லாம் கூட்டிக்கொண்டு போகலாம் என்றுதான் வந்தேன். நாளை சாயங்காலம் வந்திடுவாள்."
மாப்பிள்ளை சிரித்துக்கொண்டு, "இரண்டு நாள்தான் லீவு எடுத்து வந்தேன்; நாளை சாயங்காலம் ரயில்லே இருப்போம்..."
ரயிலில்
நல்ல இருட்டு. ஓடுகிற ரயில் வண்டியில் இரண்டாவது வகுப்பு. நீட்டுப் போக்கில் சீட்டுகள் அமைந்த விசாலமான வண்டி. முழுதும் ரிஸர்வ் செய்யப்பட்டிருப்பதால் வண்டியில் சுந்தரவடிவேலு, அவரது புது மனைவி மரகதம், குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றனர்.
சுந்தரவடிவேலு வெறும் ஷர்ட்டும் பைஜாமா கால்ச் சட்டையும் அணிந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார். மரகதம் ஜன்னலடியில் உட்கார்ந்து வெளியே பார்ப்பதும் உள்ளே குழந்தைகள் விளையாடு வதைக் கவனிப்பதுமாக இருக்கிறாள்.
குழந்தை குஞ்சு ரயில் வண்டி மாதிரி புஸ் புஸ் புஸ் என்ற வண்ணம் கைகளை பிஸ்டனைப்போல் ஆட்டிக்கொண்டு, ரயில் ஊதுகுழலைப்போல் வாயால் ஊதுகிறதும் மறுபடியும் வண்டி பெட்டிக்குள் சுற்றிச் சுற்றி ஓடி வருகிறதுமாக இருக்கிறாள். வண்டி ஓடுவதனால் சில சமயம் தள்ளாடி விழுவாள். மறுபடியும் எழுந்து நின்றுகொண்டு என்ஜின் புறப்படும்.
அவளுடைய அண்ணன் ராஜா பத்திரிகையின் சிகப்பு அட்டை ஒன்றையும் சித்தியின் பச்சைக் கைக்குட்டையையும் வைத்துக் கொண்டு 'ஸ்டேஷன் மாஸ்டர்' உத்யோகம் பார்க்கிறான். எதிர்புறத்து சீட்டு (seat) ராஜா வேலை பார்க்கும் ரயில்வே ஸ்டேஷனின் பதவி வகிக்கிறது.
"என்ன? சின்ன என்ஜினுக்குப் பசிக்கலியா?" என்கிறார் சுந்தர வடிவேலு.
"இன்ஜீன் தண்ணி குடிக்கிற டேஷன் வரலியே அப்பா" என்று குழலூதிக்கொண்டு புறப்படுகிறது குஞ்சு.
"மணி எட்டாச்சு, நீங்கள்ளாம் தூங்க வாண்டாம். டே ராஜா. கையைக் கழுவிக்கடா; மரகதம் குஞ்சுவுக்கு பாட்டில்லெ பாலை ஊத்திக் குடு" என்கிறார் சுந்தரவடிவேலு.
மரகதம் கீழே குனிந்து டிபன் பெட்டியை வெளியே இழுத்துக் கொண்டு அதன் எதிரே உட்கார்ந்து பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிவைத்திருந்த பாட்டில் ரப்பர் இரண்டையும் எடுத்துக் கழுவிக் கொண்டே, "இன்னும் புட்டியிலா பாலைக் குடுப்பா? ரப்பரைவச்சு உறிஞ்சுனா உதடுல்ல பெருத்துப் போகும்..." என்று அவரைப் பார்த்துக் கேட்கிறாள்.
"பாட்டில்லெ குடுத்தாத்தான் சிந்தாது; அவ உதட்டுக்கென்ன, அழகாகத்தான் இருக்கிறது" என குஞ்சுவை எடுத்து உதட்டில் முத்தமிடுகிறார்.
புதுமைப்பித்தன் கதைகள்
723