பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"குத்துது அப்பா" என்று முகத்தைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே இறங்க முயல்கிறது குழந்தை.

"இதோ பாரு குஞ்சு, இந்தப் பாலைக் குடிச்சிட்டு படுத்துக்கணும். நீ குடிக்கிறத்துக்குள்ளே மெத்தையைப் போட்டு வைப்பனாம்...."

"ஆட்டும் அப்பா" என அவர் உட்கார்ந்திருந்த இடத்தில் தலையணை மீது சாய்ந்தபடி பால் பாட்டிலை வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறது.

"டே ராஜா, நீ என்ன சாப்பிடப் போரே? இட்லியா, தயிர்ச் சாதமா...? உனக்கென்ன வேணும்?" என்கிறார் சுந்தரவடிவேலு.

"அப்பா, நான் அந்தப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கறனே..."

"சீ, இதென்ன வழக்கம், தயிர்ச்சாதமா பலகாரமா எது வேணும்? மரகதம் நமக்கும் எடுத்து வையேன் ...."

"பின்ன இட்டிலியைத்தான் சாப்பிடுகிறேன்" என வந்து உட்காருகிறான்.

மூவரும் சாப்பிட உட்காருகிறார்கள். "நீ என்ன சும்மா இருக்கே- நீயும் இப்பவே உக்காந்திடேன்...' " என்கிறார் சுந்தரவடிவேலு.

"நீங்கள்ளாம் சாப்பிட்டு முடியுங்க..."

"இதுதானே.. சாப்பாட்டுக் கடையே ஒண்ணா முடிச்சுப்புட்டா எல்லாத்தையும் உதறிக் கட்டி வச்சுப்பிடலாமே, நீயும் உக்காரு- அந்தக் கூஜாத் தண்ணியை எடு..."

"அதுக்காகத்தான் - அப்புறம் என்றேன்." குஞ்சு சாப்பிட்டுவிட்டு, "அப்பா இந்தா பாட்டில்..." என்கிறாள்.

"மரகதம் அதை வாங்கி வை."

எல்லாரும் சாப்பிட்டு முடிக்கிறார்கள்.

சுந்தரவடிவேலு குழந்தைகளைப் படுக்கவைத்துவிட்டு, விளக்கின் மீது கருப்புத் திரையை இழுத்துவிட்டுவிட்டு, சீட்டில் வந்து உட்காருகிறார்.

மரகதம் உடைகளை மாற்றிக்கொண்டு மெல்லிய உடையுடன் வந்து உட்காருகிறாள்.

இருவரும் மெளனமாக இருக்கிறார்கள்.

"என்ன யோசிக்கிறே....?"

"நீங்கதான் சொல்லுங்களே..."

"எனக்கு ஆயிரம் யோசனைகள் இருக்கும்; அதெல்லாம் உனக்குப் புரியாது... நீ என்ன யோசிக்கிறே...."

"குஞ்சுவெப் பாக்கப்போ இவ்வளவு துடியாக இருக்கிறாளே என்று பயமாக இருக்கு! அக்கா எப்படிப்பட்டவர்களோ? என்று

724

சிற்றன்னை