பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால் பாதங்களும் தாம் முன்பு அளவு எடுத்த தடத்தையே ஒத்திருந்தது.

சபை கலைந்தது. ஒவ்வொருவராக பாதையின் வழியாக பசுப்போல் செல்ல ஆரம்பித்தனர். துப்பறியும் இன்ஸ்பெக்டரும் புறப்பட்டார். வலக்கையில் ஒரு நீண்ட உடைமரத்தின் முள் இருந்தது. இடது பையில் கூர்மையான பென்ஸில் இருந்தது. புரட்சிக்காரர் கண்டு கொலை செய்யவந்தால் உயிர் போகுமளவாவது ஒரு வீரப்போர் நடத்தியிருப்பார் என்பது திண்ணம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமன்றோ! ஆனால் அப்படிப்பட்ட அசம்பாவிதமான விஷயம் ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் யாவரும் சென்றபின் வெகு ஜாக்கிரதையாக மாறுவேடம் புனைந்தார். தலையில் முக்காடு இட்டு கிழவன் நடக்கிற பாவனையாக இரண்டாவது குழவிப்பருவம் எய்தி, இடையிடையே இருமல் பஜனையுடன் அந்தப் புரட்சித் தலைவனை தொடர்ந்தார். நாளைக்கு ஓர் மர்மமான சம்பவம் நடக்கப்போகிறது என்பதை திட்டமாக ஊகித்து அறிந்துகொண்டார்.

காலை பத்து மணி. பாளையங்கோட்டை கலாசாலை. விளையாடுமிடத்தில் இருந்த ஒரு பெரிய மாமரத்தினடியில் முந்திய நாள் புரட்சிக் கூட்டத்தார் உல்லாசமாகப் பேசிக் கொண்டே புத்தகங்களை அம்மானை விளையாடிக் கொண்டிருந்தனர். புரட்சித் தலைவர் என்று சொல்லப்பட்டவர் எவ்வளவு கம்பீரமாக கடிகாரத்தைப் பார்க்கமுடியுமோ அவ்வளவு கம்பீரமாக பார்த்துவிட்டு திடீரென்று ஒருவனை நோக்கி, "சங்கர், நீ அங்கு நின்று பண்டிதர் கிளாசிற்குப் போனதும் வந்து சொல்" என்று அனுப்பிவிட்டு, தனது புத்தகங்களின் இடையே வைக்கப்பட்டிருந்த நீண்ட உறையை ஜாக்கிரதையாகத் திறந்து, ஓர் பத்திரம் போன்ற கடுதாசியை மிகவும் ஊக்கமாக வாசித்துக்கொண்டிருந்தார். உறையில் 'மாணவர் வீர சுதந்திரம்' என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இவர்களுக்குச் சற்று தூரத்தில் தலையில் முக்காடுபோட்டு நரைத்த மீசையையுடைய கிழவர் இவர்களைப் பார்த்ததும் பார்க்காததுமாகக் கண்காணித்து வந்தார்.

கலாசாலை மணி, 'பாடம் ஆரம்பிக்கலாயிற்று' என்பதை நீண்ட ஓசையில் பிலாக்கணம் வைத்தது. சங்கர், "அவர் போய்விட்டார்" என்று தலைதெறிக்க ஓடிவந்து சொன்னான். உடனே எல்லோரும் புரட்சித் தலைவருக்குப் பின் வரிசையாக வந்து நின்றார்கள். சிவப்புக் கழுத்துப்பட்டி, வண்ணானை நெடுநாளாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்புக் கதர்ச்சட்டை, ஒரு மல் வேஷ்டி நம் 'புரட்சித் தலைவரது' தேகத்தை அலங்கரித்தன. வலது சட்டைப் பையில் ஏதோ பருத்துத் துருத்திக்கொண்டிருந்தது.

எல்லோரும் தலைவனைத் தொடர்ந்தனர். ஊர்வலம் வகுப்பின் கதவுவரை போய் நின்றதும், புரட்சித் தலைவர், மிகுந்த காம்பீர்யமாக நாடகத்தில் அயன் ராஜபார்ட் முதல் தடவை பிரவேசிப்பதுபோல் நடந்து சென்றது. தனது கையிலிருந்த நீண்ட உறையை, பண்டிதர் அருகிலிருந்த மேஜையின் மேல் அனாயாசமாக வீசி எறிந்துவிட்டுத்

72

திருக்குறள் செய்த திருக்கூத்து