பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரவடிவேலு முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "இவ்வளவு மணி நேரத்திற்கப்புறம் இத்தினி பக்ஷணம்...! ராத்திரி சாப்பிடக் கீப்பிட வேண்டாமா? எனக்கு வெறும் காப்பி போதும்!"

"கொஞ்சம் நேரம் கழித்து பசிக்கிறப்ப சாப்பிடுகறது; எட்டு மணிக்குத்தான் சாப்பிடணும் என்று சாஸ்திரத்திலே எழுதியா வச்சிருக்கு!" என்கிறாள் மரகதம்.

"நமக்காக குழந்தைகள் முழித்துக்கொண்டிருக்குமா?" என்று குழந்தைகளுக்குப் பலகாரங்களில் ஓரொரு துண்டு கொடுத்துவிட்டு காப்பியைக் கொடுக்கிறார். தம்ளரில் பாதி முகம் மறைய நாற்காலியில் நின்றுகொண்டு காப்பியைக் குடிக்கிறது குஞ்சு. தம்ளரில் குடிப்பதால் சட்டையில் வழிகிறது. "அவளுக்கு பாட்டிலில் கொடுக்கக் கூடாது?" என்கிறார் சுந்தரவடிவேலு.

பையன் அவர் பக்கமாக வந்து காதோடு காதாக, "எனக்கு பழயது வாண்டாம் அப்பா, அம்மாகிட்ட சொல்லு" என்கிறான்.

அவர் சிரித்துக்கொண்டு, "என்ன மரகதம், குழந்தைகளுக்கு பழையதா குடுத்தே! பிடிக்கலேன்னா விட்டுடு!" என்கிறார்.

"காலம்பர தயிரும் பழையதும் சாப்பிட்டாத்தானே உடம்புக்கும் பெலன்" என்கிறாள் மரகதம்.

"பலத்துக்கு வேண்டுமானால் டானிக்கிருக்கிறது... வேண்டாம் என்றால் விட்டுடு சரி, நாளாண்ணைக்கு ஒரு இடத்துக்குப் போகணும்; சாயங்கால காப்பிக்குக்கூட வரமாட்டேன். இப்போ உள்ளே போனதும் ஒரு கடுதாசிக் கட்டு எடுத்துத் தாரேன்; அதெ ஞாபகமா நான் போரப்ப என் கைப்பையிலே வச்சுப்புடு.. எனக்கு இப்பொ கிப்போ மறதி ஜாஸ்தியாகுது.." என்கிறார்.

"ஆகட்டும்" என்கிறாள் மரகதம்.

நன்றாக இருட்டிவிடுகிறது.

"அப்பா,அப்பா! ஒரு கதை சொல்லு" என்கிறான் ராஜா

"என்ன கதை வேணும்? குஞ்சு நீ சொல்லு!"

"குருவிக் கதை" என்கிறது குழந்தை.

"ஒரே ஒரு மரத்துலெ சின்ன குருவி இருந்துதாம். கூண்டிலே உக்காந்துகிட்டு எட்டி எட்டிப் பாத்துதாம்." "எட்டி எட்டி ..... பாத்துதாம்" என இரு குழந்தைகளும் கோஷிக்கின்றன.

"திடீலுன்னு மழையும் காத்துமா அடிச்சுது. இடி இடிச்சுது; பளிச்சு பளிச்சின்னு மின்னிச்சு; பெரிய காத்தும் மழையுமா அடிச்சுது. அந்த சின்னக் குரிவிக் குஞ்சு நனஞ்சே போச்சு. குரிவி கூண்டிலே இருந்து எட்டி எட்டிப் பாத்துதாம்.. அப்பொ ஒரு கொரங்கு நனஞ்சுகிட்டு உக்காந்திருந்துதாம்."

"கொரங்கு யார் மாதிரிடா இருந்துது?"

730

சிற்றன்னை