பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/735

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குஞ்சு மறுபடியும் கீழே வருகிறாள்.

அண்ணனிடம் வந்து மெதுவாகக் குனிந்து பார்க்கிறாள்

"பத்துக்கோ - வா" என்று அழைக்கிறாள்....

அவன் எழுந்து நிற்க முடியாமல் ஊர்ந்து ஊர்ந்து வெகு கஷ்டத்தின் பேரில் மச்சை அடைகிறான். குழந்தை தன் பலம் கொண்ட மட்டும் மேலே இழுக்கிறது.

இவ்வாறு மச்சை அடைகிறது குழந்தைகள்...

ராஜா குஞ்சுவின் சின்னக் கட்டிலில் படுத்துக்கொள்ளுகிறான். குழந்தை தன் சிறு துணிகளை எடுத்துப் போர்த்திப் பார்க்கிறது. சரியாக மூடாததினால் சிரமப்பட்டுக்கொண்டு வருகிறது.

அவனுக்குப் போர்த்துகிறது.

கட்டிலுக்குப் பக்கத்தில் தன் சிறிய நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டு - "வலிக்கிதாம்மா கண்ணு? தடவட்டா" எனப் போர்வைக்குமேல் அவன் கையைத் தடவுகிறது. நெஞ்சில் தடவ கட்டிலின் மேல் ஏறுகிறது....

"நெஞ்சு வலிக்குடி.... அம்மாடி!" என்கிறான் ராஜா.

குழந்தை மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அவன் கையையும் காலையும் தடவுகிறது.

ராஜா முனகிக்கொண்டு படுத்திருக்கிறான்.

மழை ஓய்ந்துவிட்டது.

சந்திரன் உதயமாகிவிட்டது.

அறையில் மற்றப்படி வெளிச்சமில்லை.

"குஞ்சு, அப்பா வந்திட்டாங்களா?" என்கிறான் ராஜா.

"இல்லியே" என இரு கைகளையும் விரிக்கிறது குழந்தை.

"குஞ்சு, கொஞ்சம் தண்ணி கொண்டாரியா?" என்கிறான் மறுபடியும்.

"பாலு இருக்குது குடிக்கிறாயா?" மத்யானம் தான் குடிக்காமல் மிச்சம் வைத்திருந்த பாலை பாட்டிலுடன் எடுத்துக்கொண்டுவந்து அவன் வாயில் வைக்கிறது. அவன் குழந்தை மாதிரி பாட்டிலில் பாலைக் குடிக்கிறான்....

கொஞ்ச நேரம் கழித்து....

"குஞ்சு அப்பா வந்திட்டாங்களா? எனக்கு எப்டியெல்லாமோ வருதே!" என்றான் ராஜா.

"இல்லியே!" என்றுவிட்டு, "நான் 'ரா ரா ரோ' சொல்லட்டுமா, தூங்கு?" என "ஆராரோ ஆரிரரோ என்னப்பன் ரா ரா ரோ! ரா ரா ரோ!" எனத் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

734

சிற்றன்னை