பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரும்ப, வெளியிலிருந்து கூட்டம், "மாணவர் வாழ்க! மாணவர் வெல்க!" என்று ஏக குரலில் கோஷித்தது. பிறகு புரட்சி வீரர் தன்சைன்யத்தை யழைத்துக்கொண்டு தனது மாமரக் கோட்டைக்கு வந்துவிட்டார். அவசர அவசரமாக இவர்களைத் தொடர்ந்த கிழவனை யாரும் கவனிக்கவில்லை.

பண்டிதருக்கு இம்மாதிரியான நடத்தை மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்குமென்றாலும் முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. பண்டிதரல்லவா? பிறகு அந்த உறையைப் பிரித்து உள்ளிருந்த பத்திரத்தை வாசித்தார். அது பின்வருமாறு:

மாணவர் சுதந்திரப் பத்திரம்

பாளையங்கோட்டைக் கலாசாலை பதின்மூன்றாவது வகுப்பு அல்லது பி.ஏ. முதல் வருஷத்து மாணவர்களது 'மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கத்தின்' ஆதரவின் கீழ் 13.8.33ல் நடந்த பொதுக்கூட்டத்தில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இச்சங்கம்,

1. மாணவர் சுயமரியாதைக்கு இழுக்காக, அநாகரீகமான, மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் பண்டிதர் நடப்பதை வெறுத்துக் கண்டிக்கிறது.

2. மாணவர்களின் தொன்றுதொட்டு வந்து உரிமைகளை (வியாசங்கள், புத்தகங்கள் கொண்டுவராமலிருத்தல் முதலியன) மறுபடியும் வற்புறுத்துகின்றது.

3. தண்டம் வசூலிக்கும் கோழைத்தனமான செய்கையை தனது முழு ஆத்ம பலத்துடனும் கண்டிக்கிறது.

4 மனிதரை விலங்கினத்தினின்றும் பாகுபடுத்தும் சிரிக்கும் உரிமை மாணவர்களுக்கு உண்டு என்பதை மிகவும் அழுத்தமாக வற்புறுத்துகிறது. மாணவர்கள் தனியாகவோ, சேர்ந்தோ, ஏக குரலாகவோ சிரிக்கலாம் என்பதை பண்டிதருக்கு மிகவும் கண்டிப்பாக அறிவிக்கிறது.

மாணவர் வாழ்க!

மாணவர் வெல்க!


மாணவர் சுதந்திர சுயமரியாதைச் சங்கம்

இதை முழுவதும் வாசித்த பின்னும் பண்டிதர் முகத்தில் ஓர் புன்னகைதான் தவழ்ந்தது.

வேலைக்காரனைக் கூப்பிட்டு, இச்சுதந்திரப் பத்திரத்துடன் ஓர் சீட்டும் எழுதிப் பிரின்ஸிபாலுக்கு அனுப்பிவிட்டு, அங்கு மிகவும் பொறுமையுடன் காத்திருந்த மரப்பெஞ்சுகளுக்கு, வெகு உற்சாகமாக மௌனப் பிரசங்கம் ஒன்று - தனித்தமிழ் வீர வாழ்க்கையைப் பற்றியிருக்கலாம் - நடத்திவிட்டு நேரம் முடிந்ததும் பிரின்ஸிபாலைக் காணச் சென்றார்.

புதுமைப்பித்தன் கதைகள்

73