பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செலவிட்டு உடைபடுகிறார்கள். தவிரவும் க்ஷணப்பித்தமான ஆவேச அனுபூதிக்குள் ஆட்பட்டு, அதையே தன்னுயிராகப் பாவித்து, அந்த உயிர் வளரவே அந்தப் பசியை ஆற்றி வந்தவர்கள், அவர்களது மனோ மண்டலத்துக்கு புறம்பாக, வேறுபாடான அல்லது அதை ஒத்த நிலைகள் உண்டென்பதை ஒப்புக்கொள்ள விரும்பாதிருந்து, முடிவில் உடம்படுகிறவர்கள் இற்று அழிகிறார்கள். அவர்களுக்கு அவர்களே பிரபஞ்சம்; அவர்களது நோக்கே பிரபஞ்ச நியதி.

சங்கரன் முதல் மாட்டு வண்டி ஓட்டும் சங்கையாப் பிள்ளை வரை வேட்கைத் தேட்டத்தாலேயே உயிர் வாழ்கிறார்கள், உயிர் விடுகிறார்கள். புத்தன் முதல் கடைக் கணக்கு குமாஸ்தா பூலையா பிள்ளை வரை, பிறப்பித்து அலைந்து திரியவிட்டு, சோர்ந்து விழுந்தவுடன், தானாக்கி, அவர்களுடன் இரண்டறக் கலந்துவிடும் மண்ணும், யுகம் யுகமாக எழும் மானுட சிற்றலைகள், பேரலைகளின் ஓய்வு அடங்கா விளையாட்டை இரண்டுபட்ட பார்வையில்லாமல் பார்த்து வருகிறது; இனியும் பார்த்து வரும்.

இவர்கள் எல்லாரும் வருகிறார்கள், போகிறார்கள்; பாப புண்ணிய மூட்டைகள் என்ற கற்பித சுமைகளை முதுகு நெளிய சுமக்கிறார்கள். கண்ட பலன் என்ன? அவர்களுக்காயினும் சாவு என்ற விடுதலை ஒன்றிருக்கிறது. ஆனால் அவர்களது சிந்தனைகள், கருத்துக்கள். விகர்ப்பங்கள் எல்லாம் செத்து மடியாமல் அந்தரத்தில் நின்று, பைசாசங்கள் போல அலைந்து திரிந்து வருகின்றன. பிறப்பித்தவன் பொறுப்பை மறந்து சாக, வருகிறவனைப் பிடித்து ஆட்டி, பிரபஞ்சத்தின் நியதிகளுக்கு குறுக்கே வந்து விழுந்து நிலை புரட்டி வேடிக்கை பார்க்கின்றன. மனிதனுடைய சம்பத்து வெறும் சரீர தேவை திருப்திக்காக, சேர்த்து வைத்துவிட்டுப்போன விவகாரம் மட்டுமல்ல. மன வேட்கையின் சாந்திக்காக, குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட பக்குவத்தில், வாழ்வின் நியதியுடன் ஒன்றி இருப்பதுபோல் தோன்றிய கருத்துக்களுக்கு சாகாவரம் கொடுத்து அவற்றை அலகைகளாக்கி மனித வர்க்கத்தை வேட்டையாடவிட்டுப் போகும் காரியங்களும் சொத்துத்தான். ஓநாய்கள் உடலைத்தான் கிழித்துத் தின்னும். ஆனால் இந்த அலகைகளோ உயிரை உண்ட பினபும் பசியாறாது. பொறுப் பற்ற விதத்தில் குழந்தைகளைப் பெறுவதைவிட பன்மடங்கு அயோக்கியத்தனமானது கருத்துக்களை சிருஷ்டிப்பது.

இந்த அயோக்கியத்தனமான காரியங்களில் இறங்காதுபோனால் மனுஷ சமுதாயத்துக்கு கதி மோட்சம் கிடையாது மனுஷனைக் கொன்றுவிட முடியும்; ஆனால் கருத்துக்களைக் கொல்ல முடியாது. அவசியம் கழிந்தும் அழியாமல் நடமாடும் அந்த அலகைகளின் வலுவை வாங்க வேறு கருத்துக்களை உண்டாக்கிவிட வேண்டும். அவை ஒன்றையொன்று மோதி, பரஸ்பரம் வகித்த தெம்பை நைய வைத்துக்கொண்டு பிறகு இவ்விரண்டும் சேர்ந்து மனித வர்க்கத்தின் மீது பாய, பின்பொரு சாகுபடியும் மோதலும் இப்படியாக வாழ்வை, அனுபவபூர்வமான வாழ்வை, கடலின் ஏற்றவற்றம்போல கொந்-

புதுமைப்பித்தன் கதைகள்

741