தளித்து இடைவிடாமல் குமையச் செய்துகொண்டே இருக்கும். இந்தக் குமைச்சலிலேதான் வாழ்வுக்கு உயிர்நாடி இருக்கிறது; வாழ்வுக்கு பொருள் இருக்கிறது. ஸ்தூலமான, ஆனால் இடைவிடாது மாறிவரும் வாழ்வை, சூட்சுமமான அலகைக் கருத்துகள்தான், ஒரே தரிசன ரீதியில் செல்லுவதாக நம் மனசுக்கு ஒரு நிம்மதியை, தெம்பை, ஒரு சாந்தியைத் தருகிறது. அதனால்தான் கரிகால சோழன் முதல் கருப்பையா வாண்டையார் வரை வந்த ஜன வெள்ளம், ஒருமைத் தன்மை தனக்குள் இருப்பதாக பாவித்துக்கொள்ள ஒரு யோக்கியதை பெறுகிறது. ஆகையால்தான் ஸ்தூலமான வாழ்வை, சூட்சுமமான, கற்பித, சங்கேத் நியதிகளுக்காக திரஸ்காரம் செய்ய மனித வெள்ளம் சம்மதிக்கிறது. இந்த வெள்ளத்தின் உற்பத்தி ஸ்தானம் எது? எங்கே போய் சங்கமுகமாகிறது ? ஜட சாஸ்திரம் என்னதான் நுணுக்கமாக வாதித்தாலும், இது பிரபஞ்ச ரகசியங்களுள் ஒன்று. இது பரம ரகசியமாக இருப்பதினாலேயே வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கிறது.
இந்த பரம ரகசியத்தை தெரிந்துகொள்ளுவதற்காக மலைக்கு ஓடுவதிலும் அல்லது வேதி நூல் சோதனைக் கூடத்தை நாடுவதிலும் பிரமாத வித்தியாசம் கிடையாது. 'ஏன்?' 'அப்புறம்?' என்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டிலும் பதில் கிடைக்காது. அதாவது பதில் என ஒப்புக் கொள்ளக் கூடியது கிடைக்காது. ஆனால் அவனவன் மனப்பக்குவப்படி கட்டிவைக்கும் மனக்கோட்டைகளான பதில்களை மனுஷ வெள்ளம் பிரவகித்துச் சென்ற மார்க்கத்தில் இரண்டு பக்கத்திலும் ஒதுங்கிக் கிடப்பதைப் பார்க்கலாம். அவற்றால் மனுஷ பிரவாகத்துக்கு பயன் உண்டா என்பதற்கு நிலையான திருப்தி தரக்கூடிய பதிலைச் சொல்லுவதற்கே முடியாது. ஆகையால் பதில்களில் பொருள் இல்லை. எழுப்பப்படும் கேள்விகள்தான் பிரபஞ்ச ரகசியத்தின் உண்மையான பதில்கள். மனித வரம்பை, நிலையற்ற சாகையில் காணும் நிலையாழத்தை காட்டுவன அவைதான். அவற்றை நாட சிற்றூர் சிற்றூராக அலைய வேண்டாம். மறுகால் மங்கலத்தில் பிடிபடாத பிரபஞ்ச ரகசியம் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் கிடைக்காது. மறுகால்மங்கலம் என்ற மறுகால் நல்லூர் சிற்றூர்தான். வைராக்கிய சிகாமணியின் ஏகாக்கிர சிந்தை போல, தனது சிரத்தை யெல்லாவற்றையும் கவிய வைப்பதற்கு ஒற்றைத் தெருவே போதும் என திருப்தியனடந்தவூர். மனுஷ வெள்ளம் கரை உடைக்காமல் மறுகால் திறந்ததுபோல வாழ்வின் சோபைகளை அப்படியே வடிய விட்டுக் கொண்டு வந்தது போலும். ஜனசங்கி கணக்குப்படி அதை ஊர் என்று சொல்லுவதே உயர்வு நவிர்ச்சி. சேர்மாதேவி திருநெல்வேலி ரஸ்தாவில் மூன்றாவது மைல் கல்லுக்கு வந்து நின்றால், மறுகால்புரத்துக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கை நிச்சயமாக ஏற்படும். ரஸ்தாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. அதிலிருந்து பிரியும் கிளையின் கரைமேல் நடந்துகொண்டே போனால், நான்கு பக்கத்திலும் பச்சைப்பசேலென்ற வயலுக்கு மத்தியிலே காரைக் கட்டிடமும்
742
அன்னை இட்ட தீ