பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திடீரென்று வளையும் திருப்பம் விஸ்தாரமான புல்வெளியும், சூரிய காந்தியும், சிவப்புக் கல்வாழையும் நிறையப் பூத்துச் சொரியும் பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தை நமது கட்புலனுக்குக் கொண்டுவரும். அதுதான் திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் பங்களா. முன் வெராண்டாவில் நாற்காலிகள் உண்டு. அது காலியாக இருக்கும். அதற்கு அருகில் டவாலி போட்ட சேவகன் உட்கார்ந்து, சுவரோட்டை வழியாக வரும் பங்காக் கயிற்றைப் பிடித்து அசைத்துக்கொண்டிருப்பான். வாசல் அருகே வேறு இரண்டு டலாயத்துக்கள் வெள்ளித் தடி பிடித்து, பெரிய தலைப்பாகை கட்டி நிற்பார்கள். இவர்களது வேலையெல்லாம் யாரானாலும் உள்ளே புகவிடாமல் தடை செய்வதுதான். கறுப்பர்களானால் இவர்கள் நிச்சயம் உள்ளே விட மாட்டார்கள். வெள்ளைக்காரர்கள் வந்தால், 'துரைக்கு'ப் பிரியமில்லாதவரானால் உள்ளே விட்டுவிட்டு, திட்டோ உதையோ வாங்கிக்கொள்ளுவதை பொருட்படுத்த மாட்டார்கள். இவர்கள் பல கலெக்டர்களைக் கண்டவர்கள். வருவோர் போவோர் கலெக்டர்கள்தான்; இவர்கள் நித்ய வஸ்துகள்; சாட்சாத் கடவுளர்கள்!

கலெக்டராக வந்தவர் புதியவராக இருந்தால், அவரது போக்கு இன்ன மாதிரிதான் என 'அத்துபடி'யாகும்வரை, தலை போகும் காரியமாயினும் யாரையும் உள்ளே விடமாட்டார்கள். உள்ளே விட்ட பிறகு, உதை கிடைத்தால் வாங்குவது யார்; வந்தவர்களுக் கென்ன; சமயம் சரியில்லை என்று வசவை வாரிக் கட்டிக்கொண்டு, மீண்டும் - பிறகு - முற்றுகையிட வாபஸாகி விடுவார்கள்.

புதுக் கலெக்டரான ஜான் ஸாமுவேல் எவரட் பர்டர்ட் போக்கே இவர்களுக்கு பிடிபடவில்லை. இவருக்கு வந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே கடுவா பர்டாட் துரை என்று நாமகரணமாயிற்று. கலெக்டராபீஸிலும், மேலரத வீதி கிட்டங்கி முதலாளிகளிடையிலும் கடுவா பாடாட் என்ற பாஷைப் பிரயோகம் சர்க்கார் நோட்டு மாதிரி செலாவணியாகி வருகிறதென்றாலும் அந்த புதுப்பெயர் வைத்த பண்டிதர்கள் வாசல் காக்கும் சப்ராசிகள்தான் என்பது யாருக்கும் தெரியாது.

ஜான் எவரட் பர்டர்ட், வறட்டு வெள்ளைக்காரர் அல்ல. காமன்ஸ் சபையில், கபடு சூது அற்றிருந்ததற்காக ஷெல்டன் ஆன் ட்வீட் தொகுதி வாக்காளர்கள் மறுபடியும் தெரிந்தெடுத்து வந்த ஸாமுவேல் எவரட் பர்டர்டின் கடைசி மகன். லிபரல் கட்சிக்கு இவர் வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கை உண்டு. இவருக்கு லிபரல் கொள்கையில் நம்பிக்கை உண்டு. இப்படியாக, ஒரு உபகேள்விகூட கேட்காமலும், வலுக்கட்டாயமாக குடத்து விளக்குப்போலும் இருந்து வந்த ஸாமுவேல் எவரட் பாடாட் வாலிப தசையில் மான்செஸ்டர் துணி முதலாளி ஒருவரின் மகளைக் கலியாணம் செய்துகொண்டு அரசியலில் இறங்கினார். மாமனார் முதலில் அவரை கன்ஸர்வேட்டிவ் கட்சி மூலம் காமன்ஸ் சபைக்குள் சேர்ப்பித்தார். வாலிப ஸாமுவேலுக்கு ஜோஸப் சேம்பர்லேனுடைய லிபரல் கொள்கையும்

புதுமைப்பித்தன் கதைகள்

757