பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காரர் தொப்பியை எடுக்கும் பாவனையாக பொய் மீசையை எடுத்துவிட்டு "நான் தான் வித்தல் ராவ் சி.ஐ.டி." என்று பிரின்ஸிபாலுக்கு தனது சுய உருவை கடாக்ஷித்தருளினார். காரியம் என்னதென்று விளங்காவிட்டாலும் பிரின்ஸிபாலுக்கு வித்தல் ராவின் நாடகத்திறமையைப் போற்றாமலிருக்க முடியவில்லை. அவர் உடனே, "உமக்கு எனது மாணவருடன் என்ன வேலை?" என்றார்.

"அவன் ஒரு பயங்கரமான புரட்சிக்காரன். உம்மேல் வெடி குண்டை எறிய எத்தனித்தான். நேற்றே இவன் சூழ்ச்சியை எல்லாம் கண்டுபிடித்துவிட்டேன். என்னை இவன் ஏமாற்ற முடியுமா?" என்று சொல்லிக்கொண்டே புரட்சித் தலைவன் சட்டைப் பையிலிருந்த அந்த பயங்கரமான வஸ்துவை எடுத்தார். அது கசங்கிப்போன ஒரு சோற்றுப் பொட்டணமாக இருந்தது! உடனே யாவரும் சிரிக்காமலிருக்க முடியவில்லை.

"வாலிபனாகிலும் இவ்வளவு தந்திரம் உன்னிடம் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை ஏமாற்றிவிட்டதாக மனப்பால் குடிக்காதே! என் கையில் ரிக்கார்டு இருக்கிறது" என்று நடேசனை நோக்கி உறுமிவிட்டு, பிரின்ஸிபால் துரையிடம் பேச எத்தனித்தார்.

இப்பொழுது வித்தல் ராவ் தான் வரம்பு மீறி கலவரம் விளைவிக்கவில்லையென்பதை பிரின்ஸிபாலுக்கு ருசு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தான் கண்டுபிடித்த விஷயங்களை எடுத்து சொல்லி சிறு துண்டு கடிதத்தையும் காண்பித்தார்.

"எங்கே, அந்தத் துண்டுக் கடிதத்தைப் பார்ப்போம்" என்றார் பண்டிதர்.

"இதோ இந்தாருங்கள்" என்று கொடுத்தார். பண்டிதர் அதை வாங்கி, கவனித்துவிட்டு, "நடேசனுக்கு தமிழில் போய்விடும் போலிருக்கிறதே. எத்தனை தப்பு, குறள் கூடவா சீர்தளைகளைக் கவனித்து எழுதத் தெரியாது?" என்று பண்டிதர் சிறிது கோபப்பட்டுக் கொண்டார்.

"இது இவன் எழுதியதுதான் என்று தெரிந்தும் இவனையும் இவன் கூட்டத்தையும் ஏன் கைது செய்யக்கூடாது?" என்று தமது கட்சியை ஸ்தாபித்தவர் போல் வித்தல் ராவ் கர்ஜித்தார்.

பண்டிதர் மிகவும் சாவதானமாக "இது திருக்குறள்; இதற்கு பரிமேலழகர் உரை சொல்லுகிறார்..." என்று ஆரம்பித்து ஒரு சிறு பிரசங்கம் நடத்தினார்.

வித்தல் ராவ் தனது முழு சாமர்த்தியத்தாலும் ஒவ்வொரு அம்சமாகக் கண்டுபிடித்த கேஸ், அந்த சோற்றுப் பொட்டணத்தைப்போல் சிதைந்து போனது மிக்க பரிதாபகரமாகயிருந்தது.

பிரின்ஸிபாலும், "நீங்கள் வகுப்பிற்குப் போங்கள். ராயர்வாள், உமது துப்பறியும் திறமையை வேறிடத்தில் காட்டும். நீர் என் (மார்பைத் தட்டிக்கொண்டு), மாணவரை சந்தேகித்தது என்னைச் சந்தேகித்தது மாதிரி. இனி இங்கு அரை நிமிஷமும் நிற்கக் கூடாது.


புதுமைப்பித்தன் கதைகள்

75