பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/760

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளுவாரா. சுற்றி வளைத்து வேறுயேதோ பதில் சொல்லி விஷயத்தைக் குழப்பி, தகராறு என்ன என்பதே தெரியாதபடி அடித்து விட்டார். இவ்வளவு மோதிக்கொண்டாலும் இரண்டு பேருக்கும் பரஸ்பரம் ஒருவர் மேலொருவர் மதிப்பு வைத்திருந்தனர். இல்லாவிட்டால் பெருமாள் பிள்ளை மகனையும் கூட்டிக்கொண்டுவந்து பங்களா வாசலில் காத்துக் கிடப்பாரா?

சட்டை செய்யாத சப்ராசிகளைக் காண சுப்பிரமணியத்துக்கு கோபம் கோபமாக வந்தது. மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தரிடம் இவ்வளவு அசிரத்தையா என்று அவனுக்குக் கோபம். கலெக்டர்கள் சப்ராசிகளிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ளுவார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. விஸிட்டிங் கார்டைக் கொண்டுபோய் கொடுத்தால் மூஞ்சியில் காறித்துப்பி கையில் கிடைத்ததை விட்டெறியும் கலெக்டர்களும் உண்டு. இப்படிப்பட்ட ரகம் குடிகார ஜாதி என்பது அவசியமில்லை. சப்ராசி என்ன இவ்வளவு அயோக்கியத்தனம் பண்ணுகிறானே என்று நினைப்பது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு கலெக்டர் குடிகாரன் என்று நினைப்பதும். அதிகாரம் என தப்பிதமாக எதையோ கற்பனை செய்துகொண்டு விகாரமான முறையில் நடந்துகொள்ளுகிறார்களே தவிர, அவர்களில் நூற்றுக்குப் பத்து முரடர்களோ, அயோக்கியர்களோ அல்ல. பெண்டாட்டியை அதாவது துரைஸானியை கண்டால் பெட்டிப் பாம்பாக நடுங்குவார்கள். அடைமழையில் உதகைக்கோ ஹோமுக்கோ (தாய் நாடான பிரிட்டிஷ் தீவுகளுக்கு வெள்ளைக்காரன் இடுகுறிப் பெயர்) புறப்பட வேண்டும் என்று கொடி கட்டினால், உத்தரவுக்கு அப்பீல் கிடையாது.

ஜான் எவரட் பர்டர்ட்டுக்கு துரைஸானி தொல்லை கிடையாது. வாலிப மிடுக்கில் இருந்த படபடப்பு இப்பொழுது உறுதியாக மாறிவிட்டது. கோபப்படுவதற்கு என்று குரலை மாற்றிக்கொள்ளும் அவசியம் அவனுக்கு கிடையாது. அவன் சாதாரணமாகப் பேசுவதைக் கண்டாலே சப்ராசிகள் நடுநடுங்குவார்கள்.

பெருமாள் பிள்ளையின் விஸிட்டிங் கார்ட் கலெக்டர் அறைக்குள் எட்டாமல் தயங்கியதற்குக் காரணம் வேறு எதுவும் அல்ல.

ஸ்தல பிளாண்ட்டர்கள் (தோட்ட முதலாளிகள்) சங்கக் காரியதரிசியான ஒரு வெள்ளைக்காரன் திடுதிடுவென்று 'ஜானி, ஜானி' என்று கூப்பிட்டபடி குடிவெறியில் பாட்டுப் பாடிக்கொண்டு புகும்படி சப்ராசிகள் விட்டு விட்டதற்காக அவர்கள் பட்ட அவஸ்தை தான் காரணம். 'யாரானால் உனக்கென்ன? என்பதுதான் பல்லவி. ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண்டு சப்ராசிகளைத் தன் சொந்த முறைகளைப் பிரயோகித்துக் கண்டித்தான். அடியும் உதையும் ஏச்சும் இரைச்சலும் இல்லாமல் ஆட்களை நடுநடுங்க வைப்பதற்கு அவனுக்குத் தெரியும். அதை சப்ராசிகள் அன்று கண்டுகொண்டார்கள்.

சாயங்காலம் தேயிலை அருந்திவிட்டு, கையில் ஒரு நாவலுடன் வெளியே பங்களா மைதானத்தில் உலாவ வந்த ஜான் எவரட்

புதுமைப்பித்தன் கதைகள்

759