பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன கோரமான பிசாசுச் சிரிப்பு!

மறுபடியும்...

"இன்னும் சந்தேகமா? நம்ம 'டயரி'யை வாசிக்கிறேன், கேளும்!"

"உம்..."

"ஒரு ரஸமான காதற் கதை சொல்லட்டுமா?

"ஒரு வாலிபன். நல்ல அழகன். விஷம் உள்ளே போனதால் குடல் வெந்து புண். என் மடியில்தான் கிடத்தினார்கள். எங்கள் டாக்டர் பெரிய அசகாய சூரர்; இரண்டாவது பிரம்மா. புண் குணப்பட்டுத் தான் வருகிறது. ஆள்தான் கீழே போய்க் கொண்டிருக்கிறான். டாக்டர் முழிக்கிறார். எனக்குத் தெரியும் அவன் கதை; அவருக்குத் தெரியுமா? இரண்டு வாலிபர்கள், ஆனால் பெண் ஒருத்தி, இருவருக்கும் அவள் பேரில் ஆசை. அதிர்ஷ்டச் சீட்டு இவனுக்கு விழுந்தது. ஆனால் பெண் அவனைக் காதலிக்கிறாள்.

"பிறகு என்ன! அவனுக்குக் காதல், பெண், பஞ்சணை; இவனுக்குச் சோகம், விஷம், நான்! இவன் காதல் தெய்வீகமானது. காரியம் கைகடந்த பின் தெரிந்திருந்தாலும், திருமணம் என்று சொல்லுகிறார்களே அந்த மாற்றமுடியாத உரிமை, அதையுங்கூட விட்டுக் கொடுத்திருப்பான் - அவள் வாழ்க்கையின் இன்பத்தைப் பூர்த்தியாக்க, 'அவள் கை விஷத்தால் சாகிறோம்' என்ற குதூகலம் இருந்தால், பாரேன்! பிறகு... அன்று ராத்திரி மூடிய கண் சிறிது திறந்தது. ஒரு புன்சிரிப்பு. உதட்டின் மேல் அவள் பெயர். காற்றிற்கு ஒரு முத்தம். அவ்வளவு தான்!

"நன்றாயிருக்கிறதா?

"பிறகு... அவன் சிறு பையன். சத்தியாக்கிரகி வயிற்றில்... தடிக் கம்புக் குத்து. அவனுக்கும் வைத்தியம் நடந்தது. பாவி எமனும் அவனைப் பாத்துத்தான் அன்ன நடை நடக்கிறான்! பையனுக்குச் சாவின் மேல் எவ்வளவு ஆசை! நெஞ்சில் குண்டுபடவில்லையே என்ற பெரிய ஏக்கம். அதே புலம்பல்தான். என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால்... சாவைக் கண்டதும் என்ன உற்சாகம்! காதலியைக் கண்டது போலத்தான். என்னமோ, 'ஸுஜலாம், ஸுபலாம்' என்று ஆரம்பித்தான். குரல்வளையில் கொர்ர் என்றது... பிறகு என்ன? அவன் தாயாராம், ஒரு விதவை; என்ன அழுகை அழுதாள்! - கருமஞ் செய்யத் தனக்கு ஆள் இல்லை என்றோ!

"ஹி! ஹி!! ஹி!!!

"இன்னும் ஒன்று சொல்லுகிறேன், கேள்...

"ரத்த பேதி கேஸ். அவன் ஒரு மில் கூலி. அப்பொழுது 'ஸீஸன் டல்' என் மேல்தான் கொண்டு வந்து கிடத்தினர். கூட நஞ்சானும் குஞ்சானுமாக எத்தனி உருப்படி! இத்தனைக்குமேல் இவனுடைய ஆயா ஒரு கிழவி. டாக்டர் வந்தார். வந்துவிட்டதையா கோபம்! 'கழுதையை இழுத்துக் கீழே போடு!' என்று கத்தினார். நானா

78

கட்டில் பேசுகிறது